காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு நாள் தோறும் 3,000 கன அடி காவிரி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை அவ்வப்போது கூடி வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீர் முழுமையாக வழங்கப்படாத நிலையில் தமிழ்நாடு அரசு இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 60-வது கூட்டத்தில் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இக்கூட்டத்தில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 7,500 கன அடி நீர் திறக்க தமிழ்நாடு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கர்நாடக அரசு தமிழகத்திற்கான காவிரி நீரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி திறக்க வேண்டும்.
காரணம் தமிழக டெல்டா மாவட்டங்களின் தற்போதைய சாகுபடி மற்றும் குடிநீர்த் தேவைகளைக் கருத்தில் கொண்டும், பயிர் செய்வதற்கு ஏதுவாகவும் விவசாயிகள் காவிரி நீரை நம்பி காத்திருக்கிறார்கள்.
மேலும் பயிர் செய்யப்பட்டுள்ள விளைநிலங்களுக்கும் உடனடி காவிரி நீர் தேவை.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகளும் சம்பா சாகுபடியும் நடைபெற்று வரும் நிலையில், மேட்டூர் அணை மற்றும் காவிரி நீரின் வரவு மிக அவசியமான ஒன்றாக உள்ளது.
எனவே தமிழக அரசும் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகாவிலிருந்து பெற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்
