கோபிசெட்டிபாளையத்தைக் குறிவைக்கும் எடப்பாடி கே. பழனிச்சாமி.

சின்னக் கோடம்பாக்கம் என்று அன்புடன் அழைக்கப்படும் கோபிசெட்டிபாளையத்தில் நவம்பர் 30 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தனது பிரச்சாரச் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் தற்போது கிடைத்துள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிட்டு கோபிசெட்டிபாளையத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.ஏ. செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நேற்று (நவம்பர் 27) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார்.

இதனால் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. ஆம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தனது செல்வாக்கையும், பலத்தையும் நிரூபிப்பதற்காக செங்கோட்டையனுக்குப் போட்டியாக உடனே அங்கே ஒரு பெரும் கூட்டத்தைத் திரட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதற்காகத்தான் நவம்பர் 30 ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்டுள்ளார். இதற்கு ஆளுங்கட்சியின் சார்பில் எந்த கெடுபிடியும் இல்லாமல் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு முழு ஒத்துழைப்பும், தேவையானப் பாதுகாப்பும் வழங்குவதற்கு அரசின் சார்பில் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையத்தில் விரைவில் திமுக சார்பாகவும் ஒரு மாபெரும் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு திமுக தலைமை திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. எது எப்படியோ ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் பார்வை இப்போது கோபிசெட்டிபாளையத்தின் மீது பதிந்திருக்கிறது.

கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது , இதன் எண் 106. இத்தொகுதியில் 06.01.2025 நிலவரப்படி 122069 ஆண் வாக்காளர்களும், 134148 பெண் வாக்காளர்களும், 13 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 256220 வாக்காளர்கள் உள்ளனர். இந்தத் தொகுதி திருப்பூர் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply