சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆணைக்காடு மற்றும் பெரியேரிக்காடு கிராமங்கள். இந்த இரு கிராமங்களுக்கும் இடையில் உள்ள தெர்னாக்காடு மாரியம்மன்தான் இரு கிராமத்தினருக்கும் குலதெய்வமாகும்.
இந்த கோவிலுக்கு பெரியேரிக்காடு பகுதியை சேர்ந்தவர்தான் பூசாரியாக உள்ளார். இவர் ஆணைக்காடு கிராமத்தை சேர்ந்த மக்கள் வழிபாட்டிற்கு வந்தால் பூஜை செய்வது கிடையாது, கோவிலை பூட்டிவிட்டு சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், இரு கிராமத்தினருக்கும் பனிப்போர் நிலவி வந்துள்ளது. ஆனைக்காடு கிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் பைக்கில் சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு தாக்கியுள்ளனர்.
ஆசை தம்பியை பெரியேரிக்காட்டை சேர்ந்தவர்கள் தான் தாக்கியிருக்ககூடும் என கருதி இரு கிராமத்தினரும் பஞ்சாயத்து பேசியுள்ளனர்.
இந்த பஞ்சாயத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றொரு கிராமத்தினருடன் பேசக்கூடாது என்றும், மீறு பேசினால் 5 இலட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆணைக்காடு கிராமத்தில் உள்ள பள்ளியில் மொத்தம் 85 பேர் படித்து வருகின்றனர். இதில் பெரியேரிக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் 44 பேர். இந்த 44 பேரும் ஆணைக்காடு கிராமத்திற்கு கடந்த இரு தினங்களாக பள்ளிக்கு செல்வது கிடையாது.
இதனால், ஏற்காடு உதவி தொடக்க கல்வி அலுவலர் சீனிவாசன், அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் வைத்தியப்பன் ஆகியோர், கிராமங்களுக்கு சென்று கிராமத்தினரிடையே நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெரியேரிக்காடு கிராமத்தினர் தங்கள் பிள்ளைகளை ஆணைக்காடு கிராம பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்.
இந்நிலையில் இன்று சேலம் சி.இ.ஓ. ஞாணகௌரி, ஏற்காடு காவல் உதவி ஆய்வாளர் சின்னப்பன், ஏற்காடு சேர்மேன் அண்ணாதுரை, தீபம் தொண்டு நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பெரியேரிக்காடு கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆணைக்காடு கிரமத்தினர் அங்கு செல்லும் எங்கள் குழந்தைகளை மிரட்டுவதாகவும், தண்ணீர் எடுக்க செல்லும் எங்கள் கிராம பெண்களை தண்ணீர் எடுக்க அனுமதிக்கவில்லை என்பதாலும், எங்கள் குழந்தைகளை ஆணைக்காடு கிராமத்தில் உள்ள பள்ளிக்கு அனுப்ப எங்களுக்கு பயமாக உள்ளது. எனவே, எங்கள் கிராமத்திற்கு தனி பள்ளி அமைக்க வேண்டி கோரினர்.
சி.இ.ஓ. ஞானகௌரி, தற்போது இந்த வருடம் மட்டும் ஆணைக்காடு கிராம பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புமாறும், வரும் கல்வி ஆண்டில் தங்கள் கிராமத்தில் பள்ளி கட்ட என்னால் முடிந்தளவு ஏற்பாடு செய்வதாக கூறினார். சி.இ.ஓ அளித்த உத்திரவாதத்தை ஏற்று பெரியேரிக்காட்டை சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பெரியேரிக்காடு கிராம வார்டு உறுப்பினர் வெங்கடசன் கூறியதாவது:
கோவில் பூஜை பிரச்சனையை மனதில் கொண்டு ஆணைக்காடு கிராமத்தினர் அங்கு செல்லும் எங்கள் குழந்தைகளை மிரட்டுகின்றனர். எங்கள் கிராமத்தினருக்கு தண்ணீர் எடுக்க அனுமதி மறுக்கின்றனர். அதானல்தான் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தோம். இன்று சி.இ.ஓ. வார்த்தைக்காகதான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினோம். அடுத்த ஆண்டு அரசாங்கம் எங்கள் கிராமத்திற்கு தனி பள்ளி கட்டி தர வேண்டுகிறோம், இவ்வாறு கூறினார்.
இது குறித்து ஆணைக்காடு கிராமத்தினர் கூறியதாவது:
கோவில் பண்டிகைக்கு எங்களிடம் கருத்து கேட்காமல் பெரியேரிக்காட்டினர் தானாக பண்டிகை நடத்துகின்றனர். மேலும், கோவில் பூசாரி கரியராமன் கோவிலுக்கு அருகில் உள்ள 5 ஏக்கர் தரிசு நிலத்தை ஆக்கிரமித்து அனுபவித்து வருகிறார்.
அந்த நிலத்தில நாங்கள் கொஞ்சம் விவசாயம் செய்ய முற்பட்டபோது, அந்த நிலத்திற்காக 25 ஆயிரம் ரூபாய் தந்தால்தான் கோவிலை திறந்து பூஜை செய்வேன் என்கிறார். நாங்கள் தர மறுத்ததால்தான் கோவிலை பூட்டி விட்டார். இந்த கோவில் பூசாரி எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலுக்கு சென்றால் மட்டும் பூஜை செய்யாமல் கோவிலை பூட்டி செல்கிறார்.
இந்த கோவிலை தாங்கள் சொந்தம் கொண்டாடவே தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நாடகமாடுகின்றனர். மேலும், எங்கள் கிராமத்திற்கே தண்ணீர் பிரச்சனை உள்ள போது நாங்கள் எப்படி அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியும்? இவ்வாறு கூறினர்.
இவர்கள் விரோதம் இவர்களோடு முடிய கூடாது என்று, அடுத்த தலைமுறையினரையும் அறியாமையில் மூழ்கடிக்க முயற்சித்து உள்ளார்கள். இது போன்ற மக்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றினாலும், அங்கேயும் கோஷ்டி பூசலைதான் உருவாக்குவார்கள்.
-நவீன் குமார்.
