கைக்கு எட்டியது; வாய்க்கு  எட்டவில்லை! தமிழ்நாட்டின் அரசியல் கவலை அளிக்கிறது! -டாக்டர் துரை பெஞ்சமின்.

தமிழ்நாட்டில் தற்போது திமுக – அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மக்கள் செல்வாக்கு உள்ள கட்சியாக உருவெடுத்துள்ளது. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தனித்துப் போட்டியிட்டு 35% வாக்குகளைப் பெற்று 108 தொகுதிகளை வென்றுள்ளது! தமிழக அரசியலில் இது உண்மையிலுமே வரலாற்றுச் சாதனைதான்! விஜய் -விசில் -வெற்றி! இதுதான் தவெகவின் தாரக மந்திரமாக இத்தேர்தலில் அமைந்தது.

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி அமைவதற்கு, ஏற்கனவே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைமை ஆதரவு அளித்துள்ளது. அந்த வகையில் கட்சி தலைமையின் உத்தரவை ஏற்று காங்கிரஸ் கட்சியில் வெற்றிப் பெற்ற மயிலாடுதுறை தொகுதி உறுப்பினர் ஜமால் முகமது யூனுஸ், மேலூர் தொகுதி உறுப்பினர் P.விஸ்வநாதன்,  குளச்சல் தொகுதி உறுப்பினர் தாரகை  க்யூத்பர்ட்,   விளவங்கோடு தொகுதி உறுப்பினர் T.T.பிரவீன், கிள்ளியூர் தொகுதி உறுப்பினர் S.ராஜேஷ் குமார் ஆகியோர் தவெகவிற்கு  ஆதரவு அளித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் தனித்து வெற்றிப் பெற்றுள்ளது. இதில் தவெக தலைவர் ஜோசப் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளதால், இதில் ஏதாவது  ஒரு தொகுதியை அவர் விட்டுக்கொடுக்க வேண்டும். அப்படி பார்த்தால் தற்போது தவெக வசம் இருப்பது 107  உறுப்பினர்கள். இதில் இருந்து சபாநாயகர் பதவிக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் மீதம் இருப்பது 106 உறுப்பினர்கள். இத்தோடு காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 பேரைச் சேர்த்தால் 111 உறுப்பினர்கள் தவெக வசம் தற்போது உள்ளது.  

ஆனால் ஆட்சி அமைப்பதற்கும், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கும் 118 உறுப்பினர்கள் அவசியம் தேவை. அந்த வகையில்  இன்னும் 7 உறுப்பினர்களின் ஆதரவு தவெகவிற்கு அவசியம் தேவையாக இருக்கிறது. 

அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி- 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-2, இந்திய முஸ்லிம் லீக் -2, ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவு தவெகவிற்கு இருந்தால் திமுக -அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளின் தயவு இல்லாமல் ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சி அமைக்க முடியும். மேலும், பாஜக மற்றும் அதன் கூட்டணி  கட்சிகளின் தயவு இல்லாமல் ஆட்சி நடத்த முடியும்.

அதற்கு  கீழ்காணும் உறுப்பினர்களின் ஆதரவு அவசியம் வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் 2 பேர்:

1. திண்டிவனம் தொகுதியில் அஇஅதிமுக வேட்பாளரை விட 734 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிப் பெற்ற வன்னியரசு.   

2. காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தவெக வேட்பாளரை விட 33,063 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிப் பெற்ற L.E.ஜோதிமணி. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் 2 பேர்: 

1. கீழ்வேளூர் தொகுதியில் தவெக வேட்பாளரை விட 2278 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிப் பெற்ற T.லதா.           

2. பத்மநாபபுரம் தொகுதியில் தவெக வேட்பாளரை விட 15,569 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிப் பெற்ற R.செல்ல சுவாமி   

இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் 2 பேர்:

 1. தளி தொகுதியில் பாஜக வேட்பாளரை விட 5240 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிப் பெற்ற T.ராமச்சந்திரன்.  

2. திருத்துறைப்பூண்டி தொகுதியில் தவெக வேட்பாளரை விட 12922 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிப் பெற்ற K.மாரிமுத்து. 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் 2 பேர்: 

 1.வாணியம்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரை விட 2982 வாக்குகள்  கூடுதலாகப் பெற்று வெற்றிப் பெற்ற  சையது  பாரூக் பாஷா

2.பாபநாசம்  தொகுதியில் தவெக வேட்பாளரை விட 1065 வாக்குகள் கூடுதலாகப் பெற்று  வெற்றிப் பெற்ற  A.M. ஷாஜகான்

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவு வெளிவந்து 50 மணி நேரங்களுக்கு மேலாகிவிட்டது. ஓட்டுப் போட்ட மக்களுக்கு துரோகம் இழைக்காமல்  நேர்மையான முறையில் ஆட்சி அமைப்பதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அனைத்து முயற்சிகளையும் எடுத்து விட்டார். 

கொள்கை  அடிப்படையிலும்,  தமிழ்நாட்டு மக்களுக்கு  அவர் அளித்த  வாக்குறுதி மற்றும் சத்தியத்தின் படியும்   திமுக, அதிமுக மற்றும் பாஜக  ஆதரவு இல்லாத ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிமிடம் வரை விஜய் போராடி வருகிறார். 

இதற்கிடையில் தமிழக ஆளுநரும் அழிச்சாட்டியம் செய்து வருகிறார். 

 இந்நிலையில் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைக்க ஆளுநர்  அழைப்பு விடுக்க வேண்டும். ,ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் முனைவர் தொல்.  திருமாவளவன் உள்பட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின்  தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிக்கை  கொடுக்கிறார்களே தவிர, விஜய் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவுக் கடிதம் கொடுக்க தயங்குகிறார்கள்! சர்க்கரை என்று காகிதத்தில் எழுதி நக்கினால் இனிக்குமா? இது எந்த வகையான செயல்பாடு? நிலைப்பாடு? மனநிலை என்று நமக்கு ஒன்றும் புரியவில்லை.

விஜய் பாஜக பக்கம் போய் விடக்கூடாது, தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதன் ஆதரவு நிலைப்பாடு உள்ள கட்சிகள் வளரக்கூடாது, தலை தூக்கக்கூடாது என்று தூக்கத்தில் கூட தொடர்ந்து பேசி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் உளபட மேற்படி கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய முஸ்லிம் லீக் கட்சித் தலைவர்கள் அதற்கான அரிய வாய்ப்பு இப்போது விஜய்க்கு கிடைத்திருக்கும் போது அதற்கு ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமில்லையா? அது  அவர்களுடைய  தார்மீக கடமை இல்லையா? 

விஜய் நினைத்திருந்தால் மத்திய ஆட்சியாளர்களின் உதவியுடன் அதிமுக ஆதரவைப் பெற்று இந்நேரம் ஆட்சி அமைத்து முதலமைச்சர் பதவியில்   அமர்ந்திருப்பார். அது இப்போது  நினைத்தாலும் நிச்சயம் நடக்கும். ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மக்களுக்கு அளித்த சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலும் அவர் இந்த நிமிடம் நேர்மையான முறையில் ஆட்சி அமைக்க போராடி வருகிறார். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் உறுதுணையாக இருக்க வேண்டும். திருமாவளவன் மனது வைத்தால்  இடதுசாரிகளையும்  மற்றும் இந்திய முஸ்லிம் லீக் கட்சி  தலைவர்களையும் விஜய்க்கு ஆதரவாக கொண்டு வந்து சேர்க்க முடியும். அதை அவர்  செய்ய வேண்டும்! செய்வார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

ஒருவேளை அவர் செய்ய மறுத்தால் தமிழக அரசியல் வரலாறு அவரை ஒருபோதும் மன்னிக்காது! 

நேர்மையான முறையில் ஆட்சி அமைக்க ஆதரவு கிடைக்காத பட்சத்தில் ஆளுநரை எதிர்த்து விஜய் உச்ச நீதிமன்றம் செல்வதை விட, மீண்டும் மக்கள் மன்றத்திற்கு செல்வதுதான் சரியாக இருக்கும். ஆம்  மீண்டும் ஒரு தேர்தல் மூலம் மக்களை நாடி சென்றால் தனிப்  பெரும்பான்மையில் ஆட்சி அமைப்பதற்கு மக்கள் நிச்சயம்  வாக்களிப்பார்கள்; அது உண்மையிலுமே விஜய்க்கு நல்ல வாய்ப்பாகவும் இருக்கும்!

குதிரை பேர அரசியலில் தினம், தினம் செத்துப் பிழைப்பதை விட, மக்களிடமே மீண்டும் முறையிடுவது தான் சரியான அரசியல் அறமாக இருக்கும்! இதை விட்டால் விஜய்க்கு வேறு வழி இல்லை! 

இது தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பைக் “கிளிக்” செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2026/05/07/119875/

Leave a Reply