Thiru. Rajendra Vishwanath Arlekar
Hon’ble Governor of Kerala and
Hon’ble Governor of Tamil Nadu
இந்தியாவில் ஒரு மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான சட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் முக்கியமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைகின்றன.
மாநில பொதுத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் (பாதிக்கும் மேல்) பெறும் கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்க ஆளுநரால் (Governor) அழைக்கப்பட வேண்டும்.
அதாவது அதிக இடங்களைப் பெற்ற கட்சியின் தலைவரை, ஆட்சி அமைத்து, முதல்வராகப் பதவி ஏற்க ஆளுநர் தானாகவே அழைப்பு விடுக்க வேண்டும்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு அந்த வாய்ப்பை ஆளுநர் முதலில் வழங்க வேண்டும்.
ஆளுநர் முன்னிலையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.
ஆட்சி அமைத்த பிறகு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மாநில சட்டப் பேரவையில் (Assembly) நம்பிக்கை வாக்கெடுப்பு (Confidence Motion) மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்!அவ்வளவுதான்.
ஆளுநர் அதிக இடங்களைப் பெற்ற கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க தானாக முன்வந்து முதலில் அழைப்பு விடுக்க வேண்டும்.
அதை தமிழக பொறுப்பு ஆளுநர் செய்ததாக எழுத்துப்பூர்வமான உத்தரவுகள் எதுவும் இந்த நிமிடம் வரை வெளியாகவில்லை.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் நேற்று (மே 6) தமிழக பொறுப்பு ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரி எழுத்துப்பூர்வமான கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துள்ளார்.
பெரும்பான்மை (118) உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதங்களை ஒப்படைத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும் என்ற தோரணையில் தமிழக பொறுப்பு ஆளுநர் பிடிவாதமாக இருப்பதாக அவரது நடவடிக்கைகள் உணர்த்துகிறது.
சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கு ஆளுநர் பதவி பிரமாணம் மட்டுமே செய்து வைக்க வேண்டுமே தவிர, ஆளுநர் முன்பாக முன்கூட்டியே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதில் முக்கியமான விசியம் என்னவென்றால், பயத்தின் காரணமாகவோ, தான் சார்ந்து இருக்கும் கட்சித் தலைமையின் அழுத்தம், மிரட்டல், அச்சுறுத்தலின் காரணமாகவோ, தாங்கள் விரும்பும் ஆட்சி தலைமைக்கு வெளியில் வெளிப்படையாக ஆதரவளிக்க தயங்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ரகசியமாக தான் விரும்பும் ஆட்சி தலைமைக்கு சுதந்திரமாக வாக்களிக்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
அப்படி ஒரு சூழலில் எந்த ஒரு குதிரைப் பேரமும், உறுப்பினர்கள் கடத்தலும், அமைச்சர்கள் பதவிக்கானப் பேரமும், நெருக்கடியும் இல்லாமல் ஜனநாயகம் முழுமையாக காப்பாற்றப்படும்.
எனவே, இந்த ஜனநாயக உரிமையை ஆளுநர் முன்கூட்டியே தடுக்க முயற்சிக்கக் கூடாது.
ஆளுநர் சட்டத்தின் ஆட்சியை நேர்மையாக அமைப்பதற்கு முன் வராத நிலையில், தொடர்ந்து காலம் தாழ்த்தும் நிலை ஏற்பட்டால், அந்தந்த கட்சியில் வெற்றிப் பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை, அந்தந்த கட்சி தலைமையே சட்ட விரோதமாக அடைத்து வைக்கும் போக்கும், மற்றவர்கள் கடத்திச் செல்லும் வாய்ப்பும், தனிப்பட்ட ஆதாயத்திற்கு ஆசைப்பட்டு தானாகவே உறுப்பினர்கள் தலைமறைவாக வேண்டிய கட்டாயமும், சில நேரங்களில் உறுப்பினர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அபாயமும் இருக்கிறது.
இதையெல்லாம் ஆளுநர் கவனத்தில் கொள்ள வேண்டும். தனது பிடிவாதத்தை கைவிட்டு மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040
