ஆசிரியரை கத்தியால் குத்தி கொன்ற மாணவர்கள்! -டெல்லியில் நடந்த பயங்கரம்.

mukesh kumar tr TR.MUKAESH

டெல்லியில் பள்ளிக்கு சரியாக வராததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன், மற்றொரு மாணவனுடன் சேர்ந்து ஆசிரியரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி நங்கலா பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஹிந்தி ஆசிரியரான முகேஷ்குமார், 26.09.2016 திங்கட்கிழமை காலை பள்ளி வகுப்பறையில் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது, பள்ளிக்குள் நுழைந்த மாணவனும், வகுப்பறையில் இருந்த மாணவனும் சேர்ந்து தாங்கள் வைத்திருந்த கத்தியால் ஆசிரியர் முகேஷ் குமாரை சரமாரியாக குத்தினர். இதில் ஆசிரியர் மயங்கி சரிந்தார். உடனடியாக ஆசிரியர் முகேஷ் குமார் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். ஒரு மாணவன் 18 வயது பூர்த்தியடைந்தவன் என்றும், மற்றொருவனுக்கு இன்னும் 2 மாதத்தில் 18 வயது பூர்த்தியடையும் என்றும் கூறப்படுகிறது.

பள்ளிக்கு சரியாக வராமல், அனைத்து தேர்வுகளிலும் தோல்வி அடைந்த 6 மாணவர்கள் உள்ளனர். அவர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததால், அந்த 6 மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் பள்ளி தலைமை ஆசிரியரையும், தன்னையும் மிரட்டுவதாக, ஹிந்தி ஆசிரியர் முகேஷ்குமார் ஏற்கனவே கூறியதாக அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.

strike

ஹிந்தி ஆசிரியர் முகேஷ்குமார் கொலையைக் கண்டித்து நங்கலா அரசுப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஹிந்தி ஆசிரியர் முகேஷ்குமார் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என டெல்லி துணை முதல்வர் சிசோடியா அறிவித்துள்ளார். 

 -சதிஸ் சர்மா.