தமிழ் மக்களின் துர்ப்பாக்கிய நிலை மாற தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உறுதுணையாக இருப்பார் : இலங்கை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை.

NPC

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உறுதுணையாக இருப்பாரென, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

”பல காரணங்களினால், எமது மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலையே இதுவரை காணப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும். அதற்கு தற்போது தமிழக தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜெ.ஜெயலலிதா போன்ற மனிதாபிமானமுள்ள தலைவர்கள், எமது மக்களின் விமோசனத்திற்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் எமக்கு, உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

1987ஆம் ஆண்டில் இலங்கை – இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது, இலங்கை தமிழ் மக்கள் சார்பில் இந்திய அரசாங்கமே முகவராக நின்று செயற்பட்டது. இந்திய அரசாங்கத்தினாலும் தமிழ் மக்களாலும் எதிர்பார்க்கப்பட்டவை, 13-ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் தரப்படவில்லை. தரப்பட்ட உரித்துக்களும் எமது ஒற்றையாட்சியாளர்களால் பின்னர் பறித்தெடுக்கப்பட்டன.போருக்குப் பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் இன்றும் எம்மிடையே வடகிழக்கு மாகாணங்களில் முகாம் இட்டுள்ளார்கள். எம் காணிகளில் பயிரிட்டு வருமானத்தையும் பெற்றுக்கொள்கின்றர். இதனால் எம் மக்களின் நிலை மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், சிறந்த சமஷ்டி முறையொன்றிற்கு, இந்நாடு மாற வேண்டிய அவசியம் உண்டு. அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது” என்றார்.

-ஆர்.வினித்.