சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு; இடஒதுக்கீட்டு உச்சவரம்பு நீக்கப்படும்!-பா.ம.க. தேர்தல் அறிக்கை .

இந்தியாவில் முதன் முதலில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாட்டில் 100% இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டதன் நூற்றாண்டு வரும் 2026 & 27ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ளது. இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்தது. இடஒதுக்கீட்டின் அளவுகள் குறைந்தன. இந்தநிலை மாற்றப்பட்டு, தமிழ்நாட்டில் 100% இடஒதுக்கீட்டின் நூற்றாண்டு கொண்டாடப்படும் போது, இடஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்பட்டு முழுமையான சமூகநீதி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் முழுமையான சமூகநீதியை நடைமுறைப் படுத்துவதற்கான அடிப்படை சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதுதான். சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் இடப்பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு குறித்துப் பேசுவதற்கு முழுமையான தகுதி பெற்ற கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி தான். தமிழ்நாட்டில் 20% மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு, 10.5% வன்னியர் இடஒதுக்கீடு, 3.5% இஸ்லாமியர் இடஒதுக்கீடு, 3% அருந்ததியர் இடஒதுக்கீடு, தேசிய அளவில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினத்தவருக்கு 15% இடஒதுக்கீடு, பழங்குடியினருக்கு 7.5% இடஒதுக்கீடு என 6 வகையான இடஒதுக்கீட்டைப் போராடியும், வாதாடியும் பெற்றுத் தந்தவர் பா.ம.க.வின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தத் தகுதியுடன் சமூக நீதியில் மேலும் சாதிக்க வேண்டிய அம்சங்கள் அனைத்தையும் சாதிக்கப் பாட்டாளி மக்கள் கட்சி உறுதிபூண்டிருக்கிறது. அதன் மூலம், தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் முழுமையான சமூகநீதியை நடைமுறைப்படுத்தப் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.
சமூக நீதி தொடர்பாக மக்களுக்குப் பாட்டாளி மக்கள் கட்சி அளிக்கும் வாக்குறுதிகள்:

  1. 2021ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, இந்த ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட உள்ளநிலையில், அதைச் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்த பா.ம.க. பாடுபடும்.
  2. இந்தியாவில் இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை 50% என்ற அளவில் இருந்து தளர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், அதைச் சட்டபூர்வமாக்க பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.
  3. இந்தியாவில் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், அனைத்துச் சமூகங்களுக்கும், அவற்றின் மக்கள்தொகைக்கு இணையான விகிதத்தில் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  4. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் அவற்றின் தேவைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டின் அளவை மாற்றியமைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படும்.
  5. தேவேந்திர குல வேளாளர்களைப் பட்டியல் வகுப்பில் இருந்து நீக்கி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தம் செய்யப்படும். அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  6. மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை நீக்க பா.ம.க. பாடுபடும்.
    கல்வி, அரசு வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு
  7. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கை, மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதற்கு பா.ம.க. வலியுறுத்தும்.
  8. அரசுத் துறை மற்றும் பொதுத்துறைப் பணிகளில் பதவி உயர்விலும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.
  9. மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்.
  10. தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பிற பிற்படுத்தப்பட்டோரின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், அந்த ஆணையத்திற்குக் கூடுதல் அங்கீகாரம் வழங்க வகை செய்யப்படும்.
  11. தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையக் கிளை அலுவலகம் சென்னையில் திறக்கப்படும்.
  12. மதம் மாறிய பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளையும் தொடர்ந்து வழங்கப் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
    தனியார்துறை இடஒதுக்கீடு
  13. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், அமைப்பு சார்ந்த தனியார் துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. அமைப்புச்சார்ந்த தனியார் துறையில் 6 கோடி வேலைவாய்ப்புகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இது 10 கோடியாக உயர வாய்ப்புள்ளது. இத்துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய முடியும் என்பதால், தனியார்துறை வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு நடைமுறைபடுத்தப்படும். இதற்குத் தேவையான சட்டத்திருத்தங்கள் செய்யப்படும்.
  14. கல்வி, வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி, சமூக முன்னேற்றத்திற்கு வகை செய்யும் அனைத்து அம்சங்களிலும் இடஒதுக்கீடு நடைமுறைபடுத்தப்படும். தொழில் தொடங்க உதவி மற்றும் மானியம் வழங்குதல், அரசுத்துறை ஒப்பந்தங்கள் வழங்குதல், எரிபொருள் மற்றும் எரிவாயு விற்பனை முகமைகளுக்கு உரிமம் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த பா.ம.க. வலியுறுத்தும்.
    நீதித்துறையில் இடஒதுக்கீடு
  15. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கான கொலிஜியம் முறை அண்மைக்காலமாக மிகக்கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. கீழமை நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீடு தேவையாகும். எனவே, நீதித்துறையிலும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த பா.ம.க. பாடுபடும்.
  16. நீதித்துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வசதியாக உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்காக நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    மாநில முன்னுரிமை
  17. ஒரு மாநிலத்தில் உள்ள மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலை பணியிடங்களைத் தவிர்த்து, தொழிலாளர் நிலைப் பணியிடங்கள் அனைத்தும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்பப்படும்.
  18. மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் இடமாற்றம் செய்யப்படாத இடைநிலை பணியிடங்களில் 50% பணியிடங்கள் மாநில ஒதுக்கீடாக அறிவிக்கப்படும். இப்பணியிடங்களில் அந்தந்த மாநிலத்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள்.
  19. மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் கடைநிலைப் பணியிடங்கள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்பப்படும். அதாவது, கடைநிலைப் பணிகளில் 100% மாநில இடஒதுக்கீடு வழங்கப்படும்.
  20. மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்கள் அந்தந்த மாநில இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி, புதிய சட்டம் இயற்றப்படும்

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply