மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அனைத்து தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர்!-குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் .

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு அருண் ஜேட்லி ஒரு அரசியல்வாதி என்பதை விட பொது வாழ்வில் சிறந்த நபராக அதிகம் பணியாற்றி இருப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். தில்லி பல்கலைக்கழகத்தின் எஸ்.ஆர்.சி.சி கல்லூரியில், பல்நோக்கு அரங்கத்திற்கு அருண் ஜெட்லி பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு வழக்கறிஞர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் அருண் ஜெட்லியுடனான தமது நீண்டகால தொடர்பை நினைவு கூர்ந்தார். அருண் ஜெட்லி, எதிர்க்கட்சியினர் உட்பட அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் என்று அவர் குறிப்பிட்டார்.

விளையாட்டுத் துறைக்கு அவர் சிறந்த பங்களிப்பை வழங்கி இருப்பதாகவும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். அவர் நீண்ட காலமாக கிரிக்கெட்டுடன் இணைந்திருந்தாலும், அரசியலை அதிலிருந்து விலக்கி வைத்தே செயல்பட்டதாக திரு ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டார்.

நாட்டில் வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை நோக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக முன்னேறும் என்றும் அவர் கூறினார்.

தற்போது அனைவரும் சமம் என்ற சூழல் வளர்க்கப்பட்டுள்ளது என்றும் இது இளைஞர்களுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறிய குடியரசுத் துணைத் தலைவர், இளைஞர்கள் ஆக்கப்பூர்வமான முறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் யோகேஷ் சிங், மறைந்த திரு அருண் ஜெட்லியின் மனைவி திருமதி சங்கீதா ஜெட்லி, எஸ்ஆர்சிசி நிர்வாகக் குழுத் தலைவர் திரு அஜய் எஸ் ஸ்ரீராம், உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திவாஹர்

Leave a Reply