தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதா? அத்துமீறலை அனுமதிக்கக் கூடாது!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களுக்கும் மத்திய அரசே மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறது. நீதிமன்றங்களின் வழிகாட்டுதல் என்ற பெயரில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மருத்துவ சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம் மூலம் நடத்த மத்திய அரசு முயலுவது அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும்.

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கையை மட்டும் மருத்துவ சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம் (Directorate General of Health Services- DGHS) மூலம் மத்திய அரசு நடத்தி வருகிறது. மீதமுள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கை மாநில அரசுகள் மூலமாகவே நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இளநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கான 15% இடங்கள் தவிர மீதமுள்ள 85% இடங்களையும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்ககமே கலந்தாய்வின் மூலம் நிரப்பும். அதேபோல், முதுநிலை மருத்துவப் படிப்பிலும் அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கான 50% இடங்கள் தவிர மீதமுள்ள இடங்களை தமிழக அரசே நிரப்பும். இது தான் சிக்கல் இல்லாத எளிமையான மாணவர் சேர்க்கை முறை ஆகும்.

ஆனால், நடப்பாண்டு முதல் அனைத்து இடங்களுக்கும் மத்திய அரசின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குனர் அலுவலகமே மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தும் என்றும், அதற்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக மத்திய அரசு தெரிவித்துள்ள காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. மாணவர் சேர்க்கையை தடையின்றி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி பல்வேறு நீதிமன்றங்கள் ஆணையிட்டதன் அடிப்படையில், அனைத்து மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களுக்கும் நேரடியாக மாணவர் சேர்க்கை நடத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத வாதம் ஆகும்.

மாணவர் சேர்க்கைகள் மாநில அளவில் நடத்தப்படுவது தான் சிக்கல் இல்லாமல் இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வகையான இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசு நடத்தும் மாணவர் சேர்க்கையிலும் அதே இடஓதுக்கீட்டு முறை தான் கடைபிடிக்கப்படும் என்றாலும் கூட, 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அந்தந்த மாநிலத்தின் இட ஒதுக்கீட்டு முறையை கடைபிடித்து மத்திய அரசே கலந்தாய்வை நடத்துவது சாத்தியமல்ல. அதனால் ஏராளமான குழப்பங்களும், முறைகேடுகளும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் 69% செங்குத்து இட ஒதுக்கீடு மட்டுமின்றி, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% கிடைக்கோட்டு இட ஒதுக்கீடு என ஏராளமான இட ஒதுக்கீடுகள் உள்ளன. இவற்றை தமிழகத்தின் சமூக, கல்விச் சூழலை நன்றாக புரிந்தவர்களால் மட்டும் தான் செயல்படுத்த முடியும். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்படுவதால், மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண் ஆந்திரம், கேரளம், தெலுங்கானம் போன்ற அண்டை மாநிலங்களை விட குறைவாக இருக்கும். அதனால், அவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் பெற்று சேர முயல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநில அளவில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால் மட்டும் தான் அத்தகையவர்களை கண்டுபிடித்து தடுத்து நிறுத்த முடியும். இல்லாவிட்டால், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய இடங்களை பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பறித்துச் செல்லும் வாய்ப்புள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட அனைத்தும் நடைமுறை சார்ந்த சிக்கல்கள் ஆகும். இவற்றைக் கடந்து மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு என்பது மருத்துவக் கல்லூரிகளை நடத்தும் மாநில அரசின் உரிமையாகும். அதில் மத்திய அரசு எந்த வகையிலும் தலையிட முடியாது. நீட் என்ற பெயரில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகுதியை தீர்மானிக்கும் உரிமையை மத்திய அரசு பறித்துக் கொண்டது. அடுத்தக்கட்டமாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தும் உரிமையையும் மத்திய அரசு பறித்துக் கொண்டால், இனி வரும் காலங்களில் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் இந்தியாவின் எந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் சேரலாம்; அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மத்திய அரசின் இட ஒதுக்கீடே கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒருபுறம் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவம் பேசிக் கொண்டு படிப்படியாக மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பது நியாயமற்றது. எனவே, அனைத்து மருத்துவ இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்; இப்போதுள்ள மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முறையே தொடருவதை உறுதி செய்ய வேண்டும். இன்றைய சூழலுக்கு பொருத்தமற்ற அனைத்திந்திய தொகுப்பு முறையை ரத்து செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply