தில்லியில் காற்றின் தரக் குறியீடு மேம்பட்டு வருவதால், தரப்படுத்தப்பட்ட பதில் செயல்திட்டத்தின் மூன்றாம் நிலைக் கட்டுப்பாடுகள் தேசிய தலைநகரப் பகுதி முழுவதும் ரத்து செய்யப்பட்டு அது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) இன்று மாலை 4 மணி அறிக்கையின்படி தில்லியின்  ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI)  213 ஆக இருந்தது.  தரப்படுத்தப்பட்ட பதில் செயல்திட்டத்தின் (GRAP) மூன்றாம் நிலை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டும், வானிலை முன்னறிவிப்புகளைக் கருத்தில் கொண்டும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய காற்றின் தர மேலாண்மைக்கான (CAQM) ஆணையத்தின் துணைக் குழுக் கூட்டம் இன்று கூடியது.

தில்லி  மற்றும் புறநகர் பகுதிகளில்  வரும் நாட்களில் காற்றின் தரக் குறியீடு கடுமையான அளவில் இருக்காது என இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே, மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்துவது எனவும் ஜிஆர்ஏபி-யின் மூன்றாம் நிலைக் கட்டுப்பாடுகளை தில்லி முழுவதும் உடனடியாக விலக்கிக் கொள்வது எனவும் இன்றைய கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

எனினும் ஜிஆர்ஏபி-யின் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நடவடிக்கைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  இது தொடர்பான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைப்புகள் தொடர்ந்து தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நடவடிக்கைகளின் கீழ், சாலைகளை தினசரி அடிப்படையில் தூய்மைப்படுத்துதல், கட்டுமான தளங்களில் வழக்கமான ஆய்வு மற்றும் தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் கடுமையான அமலாக்கம், உணவகங்கள் மற்றும் திறந்தவெளி உணவகங்களில் நிலக்கரி / விறகுகளை அனுமதிப்பதில்லை, தனியார் போக்குவரத்தை குறைத்துப் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தனியார் வாகன நிறுத்தக் கட்டணங்களை அதிகரிப்பது, டீசல் ஜெனரேட்டர்கள் பயன்பாட்டுக்கான கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகள்  தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திவாஹர்

Leave a Reply