கடல் மார்க்கமாக பிரான்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 46 இலங்கையர்கள் கைது!- பழகாதத் தேவதையை விட; பழகின பிசாசுவே மேல்!

கடல் மார்க்கமாக பிரான்ஸ் நாட்டின் ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 46 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு, விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

பிரான்ஸ் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் 46 இலங்கை பிரஜைகளை 2023 ஜனவரி 13 ஆம் தேதி மாலை விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். இந்த 46 இலங்கையர்களும் கடல் மார்க்கமாக பிரான்ஸ் நாட்டின் ரீயூனியன் தீவிற்கு சட்டவிரோதமாக இடம்பெயர முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நபர்கள் 2022 டிசம்பர் 02 ஆம் தேதி நீர்கொழும்பில் இருந்து மீன்பிடி இழுவை படகில் (IMUL – A- 0559 CHW) புறப்பட்டனர். இதில் மீன்பிடி இழுவை படகின் பணியாளர்கள் உட்பட 43 ஆண்கள், 02 பெண்கள் மற்றும் 01 சிறுவர் உள்ளனர். 2022 டிசம்பர் 24 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டின் ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முற்பட்ட வேளையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இலங்கை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும், 13 முதல் 53 வயது உள்ளவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சட்டவிரோதமான பயணத்திற்குத் தலைமை தாங்கிய தெஹிவளைப் பகுதியில் உள்ள கடத்தல்காரர்கள், ஒரு நபருக்கு ரூ. 2 லட்ச  ரூபாய் வீதம் வசூலித்துள்ளனர்.

வெளிநாடுகளில் குடியேறினால் கை நிறைய சம்பாதிக்கலாம், நிரந்தரமாக நிம்மதியாக வாழலாம் என்று அப்பாவி மக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் இலங்கையில் சட்டவிரோதமான கடத்தல் கும்பல் செயல்பட்டு வருகிறது. இத்தகைய வஞ்சகர்களின் வசிய வார்த்தைகளை நம்பி உழைத்து சம்பாதித்த பணத்தை பயணக் கட்டணமாக செலுத்தி படகுகள் மூலம் கடல் மார்க்கமாக உயிரை பணையம் வைத்து ஆபத்தான தொலைத்தூர பயணத்தை மேற்கொள்ளகின்றனர்.

இத்தகைய சட்டவிரோத பயணத்தின்போதும். சட்டவிரோத குடியேற்றத்தின் போதும் கைது செய்யப்படும் நபர்கள் சித்ரவதைக்கு ஆளாவதோடு, தாங்க முடியாத அவமானங்களையும் சந்திக்கின்றனர். அத்தகைய நபர்கள் உடனடியாக மீண்டும் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுபோது சட்ட நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுகின்றனர். அதன் பிறகு சொந்த நாட்டிலேயே கண்காணிக்கப்படும் சந்தேகத்திற்குரிய நபராக ஆயுள் முழுக்க அகதிகளை போல நடைப்பிணமாக வாழ வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றனர்.

இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால், இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம்! பார்க்கும் போது இக்கரைக்கு அக்கரை பச்சையாகதான் இருப்பதுபோல தெரியும். ஆனால் அங்கு போய் பார்த்தால்தான் உண்மை நிலை புரியும். எனவே, அந்நிய நாட்டில் அச்சத்தோடு அகதியாய் வாழ்வதைவிட, சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ்ந்து மடிவது எவ்வளவோ மேல்!

ஆம், பழகாதத் தேவதையை விட; பழகின பிசாசுவே மேல்!

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply