ஏழாவது ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது; டேராடூனில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் தலைமை வகித்தார்.

முன்னாள் ராணுவ வீரர்களின் தன்னலமற்ற கடமை உணர்வு, தேசத்திற்கான அவர்களது தியாகம் ஆகியவற்றின் அடையாளமாக, ஏழாவது ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் தினம் 2023, ஜனவரி 14 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். நாடு முழுவதும் ஒன்பது இடங்களில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. டேராடூனில் முன்னாள் படைவீரர்களின் மாபெரும் பேரணியில் பங்கேற்று உரையாற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை ஈடு இணையற்ற துணிச்சலுடனும், தியாகத்துடனும் பாதுகாத்ததற்காக ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். கடமை உணர்வுடன் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

உத்தராகண்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள், மற்றும் ராணுவ வீரர்கள், தேச நலன்களைப் பாதுகாப்பதில் மிகுந்த துணிவையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியவர்கள் என அவர் கூறினார். “சுதந்திரப் போராட்ட வீரர்களை ஆதரித்த வீர் சந்திர சிங் கர்வாலி போன்றவர்கள் உத்தராகண்டைச் சேர்ந்தவர்கள்” என அவர் குறிப்பிட்டார். கார்கில் போரின் போது, எதிரிகளிடம் வலுவாக நின்று தேசத்தைப் பாதுகாத்ததில், உத்தராகண்ட் வீரர்கள் முக்கியப் பங்காற்றியதாவும் அவர் கூறினார்.

ஆயுதப் படை வீரர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் காரணமாக, நமது மக்கள் பாதுகாப்பாக உணர்வதுடன் தலை நிமிர்ந்து நடக்கிறார்கள் என அமைச்சர் மேலும் கூறினார். உலகில் இந்தியாவை சக்திவாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய தேசமாக மாற்றுவதில் நமது துணிச்சலான வீரர்கள் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வீரர்கள் அனைவரும் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் பாதுகாவலர்கள் எனவும் தேசத்தின் சொத்து எனவும் அவர் கூறினார். பாதுகாப்புப் படையினர் எல்லையில் விழித்திருப்பதால் மற்ற அனைவரும் நிம்மதியாக உறங்குவதாக அவர் தெரிவித்தார்.

படைவீரர்களுக்கு ஓய்வூதியம், மருத்துவம் மற்றும் இதர வசதிகள் வழங்கப்படுவது அவர்கள் செய்த தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்புகளுக்கு தேசம் மரியாதை செலுத்தவதன் ஒரு சிறிய அடையாளமே என்று திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார். அவர்களின் நல்வாழ்வையும் மனநிறைவையும் உறுதி செய்வது அரசின் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சென்னையில் நடைபெற்ற முன்னாள் படைவீரர்கள் தின நிகழ்ச்சி, பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

புது தில்லியில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர் சவுதாரி, கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார், ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே ஆகியோர் கலந்துகொண்டனர். முப்படைத் தளபதிகளும் ஆயுதப்படை வீரர்களின் முக்கியமான பணிகளை எடுத்துரைத்தனர். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னாள் படைவீரர்களின் தன்னலமற்ற சேவைகளை அவர்கள் பாராட்டினர். இந்நிகழ்ச்சியின்போது, இந்திய ராணுவத்தினர் இயக்குநரகம் ஆண்டுதோறும் வெளியிடும் சம்மான் இதழ் வெளியிடப்பட்டது. விமானப்படையும் வாயு செம்வேத்னா இதழை வெளியிட்டது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று காலை, முப்படைகளின் தலைமைத் தளபதி, ராணுவ, விமானப் மற்றும் கடற்படைத் தளபதிகள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோர் புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

ஜுன்ஜுனு, ஜலந்தர், சண்டிகர், பனகர், புவனேஸ்வர், மும்பை ஆகிய ஆகிய இடங்களிலும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

1947 போரில் இந்தியப் படைகள் வெற்றிபெற முக்கியப் பங்காற்றிய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியான ஃபீல்ட் மார்ஷல் கே.எம் கரியப்பா, 1953 ஆம் ஆண்டு இதே ஜனவரி 14-ம் தேதி ஓய்வு பெற்றார். அதை நினைவு கூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் ஓய்வு பெற்ற ஆயுதப் படையினரை கெளரவிக்கும் விதமாகவும் 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி ஓய்வு பெற்ற ஆயுதப்படை வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

திவாஹர்

Leave a Reply