சட்டப்பேரவை தலைவர்களின் 83-வது மாநாட்டை ஜெய்ப்பூரில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார்.

அகில இந்திய சட்டப்பேரவை தலைவர்களின் 83-வது மாநாட்டை குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கிவைத்தார். தமது தொடக்க உரையில் அவர், இந்தியா ஜனநாயகத்தின் தாயகம் என குறிப்பிட்டார். மக்களின் தீர்ப்பு மற்றும் அவர்களது நலன்களை பாதுகாப்பதிலேயே ஜனநாயகத்தின் சாரம் அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

உரை, கலந்துரையாடல், விவாதம் ஆகியவை நாடாளுமன்றங்களும், சட்டமன்றங்களும் திறம்பட செயல்படுவதற்கான முக்கிய அம்சங்கள் என்று அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவது குறித்து கவலை தெரிவித்த அவர், மக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து, மக்கள் பிரதிநிதிகள் செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், சிக்கலான சூழலில் இந்தியா இப்பொறுப்பை ஏற்றுள்ளது என்றார். உலகுக்கு இந்தியாவின் திறன்களை வெளிப்படுத்த இது சிறந்த வாய்ப்பு என்று அவர் கூறினார். அக்டோபர் மாதத்தில் இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரம் என்ற நிலைக்கு முன்னேறியதை குறிப்பிட்ட அவர், அடுத்த 10 ஆண்டுகளில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்று தெரிவித்தார். இந்தியா தற்போது முதலீடுகள், புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் வாய்ப்புகளுக்கான சிறந்த மையமாக திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் தற்போது காணப்படும் சூழல்கள் கவலையளிப்பதாக உள்ளன என்று அவர் கூறினார். இந்த அவைகளில் கண்ணியம் குறைந்தால், மக்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் என்று அவர் தெரிவித்தார். சட்டப்பேரவை, சட்டமேலவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் சாசனத்தின்படி பதவியேற்றுக்கொள்ளும் நிலையில், அவர்களால் விதிமுறைகளை எவ்வாறு மீற முடிகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார். 

இதுபோன்ற விதிமீறல்கள் அரசியல் யுக்தி அல்ல, என்று அவர் கூறினார். மக்களின் நலன்களை கவனத்தில் கொண்டு மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் கூறியதை குடியரசுத் துணைத்தலைவர் சுட்டிக்காட்டினார்.  சட்டம் இயற்றும் அவைகளுக்கும், நீதித்துறைக்கும் நல்லுறவு நிலவவேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளின் திறன்மிக்க செயல்பாடு மற்றும் உறுப்பினர்களின்  கண்ணியமான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில், அவைத்தலைவர்கள் செயலாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் கருத்துக்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் திறன் மிக்க செயல்பாடுகளை வலுப்படுத்துவதோடு, இந்த மாநாடு ஒரு மைல்கல்லாக அமையும் என்றும் திரு ஜெகதீப் தன்கர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாநாட்டில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சட்டப்பேரவைத் தலைவர்கள் பங்கேற்றனர்.

திவாஹர்

Leave a Reply