இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் முதலாவது நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் பெங்களூரில் செவ்வாய்கிழமை நடைபெறுகிறது.

முதலாவது ஜி 20 நிதி மற்றும் மத்திய வங்கி  பிரதிநிதிகள்  கூட்டம்  டிசம்பர் 13-15 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்திய ஜி 20 தலைமைத்துவத்தின் கீழ் நிதி வழிமுறை குறித்த விவாதங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் இந்தக் கூட்டத்தை மத்திய நிதி அமைச்சகமும், இந்திய ரிசர்வ் வங்கியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன

ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் தலைமையிலான ஜி20 நிதி வழிமுறை , பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்களில் கவனம் செலுத்துகிறது. இது உலகளாவிய பொருளாதார விவாதம் மற்றும் கொள்கை ஒருங்கிணைப்புக்கான ஒரு பயனுள்ள அமைப்பை  வழங்குகிறது. முதல் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் 2023 பிப்ரவரி 23-25 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும்.

 பாலி ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையில், வளர்ச்சியின் பலன்கள் உலகளாவியதாகவும், அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதுதான் இன்றைய தேவை என்று கூறினார். நிதி அமைச்சகம் இந்த யோசனையை ஜி20 நிதி வழிமுறை நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கியுள்ளது. அடுத்த ஒரு வருடத்தில் புதிய யோசனைகளை உருவாக்கி கூட்டு நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்கு ஜி20 உலகளாவிய “பிரதம இயக்கமாக” செயல்படுவதை உறுதிசெய்ய இந்தியா பாடுபடும் என்ற நோக்கையும் அவர் நமக்கு அளித்துள்ளார்.

நடைபெறவுள்ள ஜி 20  நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகளின்  கூட்டத்தில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் திரு அஜய் சேத் மற்றும் ரிசர்வ் வங்கியின் துணைஆளுநர்  டாக்டர் மைக்கேல் டி. பத்ரா ஆகியோர் இணைந்து தலைமை தாங்குவார்கள். ஜி 20 உறுப்பு நாடுகளில் இருந்தும், இந்தியாவால் அழைக்கப்பட்ட பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிலிருந்தும் அவர்களின் பிரதிநிதிகள் இரண்டு நாள் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.

ஜி 20  நிதி வழிமுறை , உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம், சர்வதேச நிதிக் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிதியுதவி, நிலையான நிதி, உலகளாவிய சுகாதாரம், சர்வதேச வரிவிதிப்பு மற்றும் நிதிச் சேர்க்கை உள்ளிட்ட நிதித் துறை பிரச்சினைகளை உள்ளடக்கிய, உலகப் பொருளாதாரத்துடன் தொடர்புடைய முக்கிய விஷயங்களைப் பற்றி விவாதிக்கிறது.

பெங்களூரு கூட்டத்தில், இந்திய ஜி 20 தலைமைத்துவத்தின்  கீழ் நிதிப் வழிமுறைக்கான நிகழ்ச்சி நிரலில் விவாதங்கள் நடைபெறும். 21-ஆம் நூற்றாண்டின் பகிரப்பட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள சர்வதேச நிதி நிறுவனங்களை மறுசீரமைத்தல், நாளைய நகரங்களுக்கு நிதியளித்தல், உலகளாவிய கடன் பாதிப்புகளை நிர்வகித்தல், நிதி உள்ளடக்கம் மற்றும் உற்பத்தித்திறன் ஆதாயங்களை முன்னேற்றுதல், பருவநிலை நடவடிக்கை மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான நிதியுதவி, ஆதரவற்ற கிரிப்டோ சொத்துகளுக்கான உலகளாவிய ஒருங்கிணைந்த அணுகுமுறை,  சர்வதேச வரிவிதிப்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்தல் ஆகியவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும்.

கூட்டத்திற்கு இடையே , ’21-ஆம் நூற்றாண்டின் பகிரப்பட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள பலதரப்பு வளர்ச்சி வங்கிகளை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் ஒரு குழு விவாதம் நடைபெறும். பசுமை நிதியளிப்பில் மத்திய வங்கிகளின் பங்கு’ என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது.

இந்திய ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருளான ‘ஒரே பூமி ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பது இந்த விவாதங்களுக்கு வழிகாட்டும். நிதி வழிமுறையின் ஏறத்தாழ 40 கூட்டங்கள் இந்தியாவின் பல இடங்களில் நடைபெறும், இதில் G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் சந்திப்புகளும் அடங்கும். ஜி 20  நிதி வழிமுறை கூட்டத்தில்  நடைபெறும் விவாதங்கள் இறுதியில் ஜி 20 தலைவர்களின் பிரகடனத்தில் பிரதிபலிக்கும்.

கோவிட்-19 தொற்றுநோய், கூர்மையான புவிசார் அரசியல் பதற்றங்கள், அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு கவலைகள், வளர்ந்து வரும் கடன் தொல்லைகள், பணவீக்க அழுத்தங்கள் மற்றும் பணக் கட்டுப்பாடு போன்ற பல சவால்களுக்கு இடையே  இந்தியா ஜி 20  தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இத்தகைய சவால்களைக் கையாளுவதில் வழிகாட்டுதலை வழங்குவதே ஜி 20  இன் முக்கிய பங்காகும்.

இந்தியாவின் ஜி 20  தலைமைத்துவத்தின் போது, மிகவும் தேவைப்படும் நாடுகளுக்கு ஆதரவளிப்பது, வளரும் நாடுகளின் கவலைகள் மற்றும் அபிலாஷைகளை பிரதிபலிப்பது ஆகியவை ஜி 20 இன் முயற்சிகளில் முன்னணியில் இருக்கும். நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவை ஜி 20 நிதி வழிமுறை  நிகழ்ச்சி நிரலை உள்ளடக்கிய முறையில் இன்றைய உலகப் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதோடு, ஒரு சிறந்த எதிர்காலத்திற்கு தயாராகும் வகையில் வழிநடத்தும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply