தமிழக மீனவர்கள் பிரச்சினை: இந்தியா எடுத்த நடவடிக்கை என்ன?-இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு வைகோ கேள்வி.

இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று 08.12.2022 அன்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அளித்துள்ள பதில்கள் வருமாறு:-

கேள்வி எண்-231

(அ) இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதையும், படகுகள் கைப்பற்றப்படுவதையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வருவதையும் இந்த அரசு அறிந்திருக்கிறதா?

(ஆ) கடந்த மூன்று வருடங்களில் இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், காயமடைந்த மீனவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள், படகுகள் சேதப்படுத்தப்பட்ட விபரங்கள் தேவை.

(இ) நிரந்தர தீர்வு காண அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் பதில்:

(அ) முதல் (இ) வரையான கேள்விகளுக்கு பதில்: இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி, இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை அதிகாரிகளால் அவ்வப்போது கைது செய்யப்படுகின்றனர். இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு இந்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் கிடைத்தவுடன், இராஜதந்திர வழியின் மூலம் அரசாங்கம் இலங்கை அரசிடம் இந்த விவகாரத்தை எடுத்துக் கொள்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் கிடைத்த தகவலின்படி, மொத்தம் 485 (2020ல் 74, 2021ல் 159, 2022ல் 252) இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 66 இந்திய படகுகள் (2020ல் 11, 2021இல் 20 மற்றும் 2022 இல் 35) இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. அரசின் தொடர் முயற்சியால் 461 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 2, 2022 நிலவரப்படி, இலங்கைக் காவலில் 24 இந்திய மீனவர்கள் உள்ளனர்.

2020 செப்டம்பரில் நடைபெற்ற இருதரப்பு உச்சி மாநாட்டின் போது, இலங்கைப் பிரதமருடன் இந்தியப் பிரதமர் நடத்திய பேச்சுவார்த்தையில், இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் ஆலோசிக்கப்பட்டுள்ளன.

இந்திய வெளிவிவகார அமைச்சர், 2021 இல், ஜனவரி 5-7 வரை கொழும்புக்குச் சென்றபோது, இலங்கையின் மீன்பிடி அமைச்சரை சந்தித்து இந்திய மீனவர்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் விவாதித்தார்.

2021 அக்டோபர் 2 முதல் 5 வரை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, இலங்கைப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலிலும் இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை மனிதாபிமான முறையில் கையாள வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கத்திடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இரு அரசாங்கங்களுக்கும் இடையில் நிலவும் புரிந்துணர்வுகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், எந்தச் சூழ்நிலையிலும் தாக்குதல்கள் நடைபெறகூடாது என்பதை இரு தரப்பும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அண்மையில், 15 ஜனவரி 2022 அன்று, இலங்கைக் காவலில் உள்ள இந்திய மீனவர்களை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து, இலங்கையின் நிதியமைச்சருடனான சந்திப்பின்போதும், இலங்கையின் வெளியுறவு அமைச்சருடனான இருதரப்பு சந்திப்பின்போதும் விவாதித்தார். பிப்ரவரி 2022, மார்ச் 2022 இல் இலங்கையின் நிதியமைச்சரின் பயணத்தின் போதும் இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது.

எஸ்.திவ்யா

Leave a Reply