தமிழக அரசு , ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

தமிழக அரசு , ஊரக வளர்ச்சித்துறையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் கணினி உதவியாளர்களின் கோரிக்கையை ஏற்க முன்வர வேண்டும் .

தமிழ்நாடு முழுவதும் 906 பேர் கணினி உதவியாளர்களாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வட்டாரங்களில் உள்ள தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை கண்காணிக்கும் அலுவலகங்களில் பணிபுரிந்து வருகிறார்கள் .

அதாவது கடந்த 17 ஆண்டுகளாக ஊரக வளர்ச்சித்துறையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்படி தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள் .

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை செய்யும் இலட்சக்கணக்கான மக்களுக்கு கணினி உதவியாளர்கள் மூலம் கணக்கிடுதல் மற்றும் ஊதியத்தை வங்கியில் செலுத்துதல் உள்ளிட்ட முக்கியமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன .

குறிப்பாக கணினி உதவியாளர்களை இளநிலை உதவியாளர்களாக ஈர்த்துக் கொள்வதற்கு தமிழக அரசு 22.03.2017 ல் அரசாணை எண் : 37 ஐ பிறப்பித்தது . ஆனால் இன்னும் அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை .

இந்நிலையில் அரசாணை 37 ஐ அமல்படுத்தி , தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனக்கோரி கணினி உதவியாளர்கள் கடந்த 01.11.2022 முதல் தொடர் விடுப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள் .

மேலும் பல்வேறு கட்ட களப்போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள் . ஆனாலும் இன்னும் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பது நியாயமில்லை . காரணம் தற்போதைய பொருளாதார சூழலில் தொகுப்பூதியத்தில் குடும்பச்செலவை சமாளிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உட்படுகிறார்கள் .

எனவே தமிழக அரசு , கடந்த 38 நாட்களாக போராடி வரும் கணினி உதவியாளர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு , அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன் .

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply