தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது!-ஜி.கே.வாசன் அறிக்கை.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு இது சம்பந்தமாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு மீனவர்களின் பாதிப்புக்கு, இழப்புக்கு நிவாரணம் பெற்றுத்தர வேண்டும். இது போன்ற சம்பவம் இனியும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

நேற்று இரவு தமிழகத்தின் நாகை மாவட்ட மீனவர்கள் பைபர் படகில் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது இரும்பு கம்பி, கட்டை ஆகியவற்றைக் கொண்டு கடுமையாக தாக்கினர். இதனால் மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார். மேலும் மீனவர்களிடம் இருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, வலை உள்ளிட்ட 2 லட்சம் மதிப்பிலான மீன்பிடிச்சாதனங்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இச்சூழலில் தப்பித்தால் போதும் என்று மீனவர்கள் அங்கிருந்து தப்பித்து கரைக்கு திரும்பினர். காயமடைந்த மீனவர் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகிறார். தமிழக அரசு சிகிச்சை பெறும் மீனவருக்கு உயர்தர சிகிச்சை அளித்து விரைவில் அவர் குணமடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை கடற்கொள்ளையர்களின் அத்துமீறிய செயலை மத்திய, மாநில அரசுகள் கண்டிக்க வேண்டும்.

குறிப்பாக மத்திய அரசு தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் சம்பந்தமாக, மீனவர்கள் சம்பந்தமாக தொடர் நடவடிக்கை எடுத்து வந்தாலும் கூட இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். எனவே மத்திய அரசு இது சம்பந்தமாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு மீனவர்களின் பாதிப்புக்கு, இழப்புக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும். இது போன்ற சம்பவம் இனியும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

மேலும் மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதுகாப்பாக நடைபெற தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply