கடலோர பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி சீ விஜில்-22 நிறைவு.

கடலோர பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியான சீ விஜில்-22 நவம்பர் 15, 16 ஆகிய இரண்டு தேதிகளில் நாட்டின் கடலோரப் பகுதியில் நடத்தப்பட்டது.  அமைதிக் காலம் முதல் போர்க்காலம் வரை கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மையமாக கொண்டு இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

கரையோரப் பகுதிகளின் பாதுகாப்பு நெறிமுறைகளில் கவனத்துடன் செயல்படுதல், விதிமீறல் நடவடிக்கைகளை கண்காணித்து தடுத்தல் போன்றவை குறித்தும் இந்த ஒத்திகையில் பயிற்சி தரப்பட்டது.   

9 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 17 அரசு அமைப்புகள் இந்த கடலோர பாதுகாப்பு நடவடிக்கையில் பங்கேற்றன.  இந்திய கடற்படை, கடலோர காவல்படை, மாநில காவல் துறைகள், சுங்கத் துறையினர், வனத்துறையினர், துறைமுக ஆணையங்கள் போன்றவையும் இதில் பங்கேற்றன.

ஹெலிகாப்டர்களும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபடுத்தப்பட்டன.  தீவிரவாத தடுப்பு தொடர்பாகவும், அவசரகால சூழலில் துறைமுக மேலாண்மை குறித்தும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

தேசிய மாணவர் படைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைக்கு ஏற்ப பல்வேறு மாநிலங்களின் தேசிய மாணவர் படையை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

திவாஹர்

Leave a Reply