பழங்குடியினர் கௌரவ தினத்தில் பகவான் பிர்ஸா முண்டாவிற்கு உலிஹாட்டுவில் மரியாதை செலுத்திய குடியரசுத்தலைவர் ஷாதோலில் பழங்குடியினர் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

பழங்குடியினர் கௌரவ  தினமான இன்று (15.11.2022) காலை ஜார்க்கண்டின் உலிஹாட்டு கிராமத்திற்கு பயணம் செய்த  குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, அங்கு பகவான் பிர்ஸா முண்டாவின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து மத்தியப்பிரதேசத்தின்  ஷாதோலில் பழங்குடியினர் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அங்கு கூடியிருந்தோரிடையே  பேசிய அவர், பழங்குடியினர் கௌரவ தின விழாவில் குடிமக்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாகக் கூறினார். நாட்டில் பெருமளவில் பழங்குடியின மக்களைக் கொண்டிருப்பது மத்தியப்பிரதேசம் என்பதால் இம்மாநிலத்தில் இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது பொருத்தமானது என்றார்.

நியாயத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்வது பழங்குடியின சமூகத்தின் தனித்தன்மை என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். தமது விடுதலைப் போராட்ட வரலாறு பழங்குடி சமூகத்தினரின் பல நிலையிலான போராட்டங்களை இணைத்துக் கொண்டுள்ளது. பகவான் பிர்ஸா முண்டா, ஜார்க்கண்டின் சித்து கன்கு, மத்தியப்பிரதேசத்தின் தாந்தியா பீல் பீமா நாயக், ஆந்திரப்பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜூ போன்ற மகத்தான ஆளுமைகள் பழங்குடியினரின் பெருமிதத்தை விரிவுபடுத்தியுள்ளனர் என்று கூறினார். இத்தகைய விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும் அவர் மரியாதை செலுத்தினார்.

பெரும்பாலான பழங்குடியின பகுதிகள் வளமான வனங்களையும் கனிம செல்வத்தையும் கொண்டிருக்கின்றன. நமது பழங்குடியின சகோதர சகோதரிகள் இயற்கை அடிப்படையிலான வாழ்க்கையை வாழ்வதோடு மதிப்புடன் இயற்கையை பாதுகாக்கின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்த இயற்கைச் செல்வம் அழியாமல் பாதுகாக்கவே இவர்கள் சீற்றத்துடன் போரிட்டனர். பருவநிலை மாற்றம், உலகம் வெப்பமயமாதல் ஆகியவை பற்றி பேசப்படும் இந்நாளில், பழங்குடியின சமூகத்தின் வாழ்க்கை முறையையும் வனப்பாதுகாப்பில் அவர்களின் உறுதியையும் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

திவாஹர்

Leave a Reply