இந்திய விமானப்படையின் பசுமை போக்குவரத்து முன்முயற்சி.

கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காகவும், மத்திய அரசின் பசுமை போக்குவரத்து முயற்சிகளுக்கு ஏற்பவும், இந்திய விமானப்படை, தமது போக்குவரத்துப் பயன்பாடுகளுக்கு டாடா நெக்ஸான் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 15 நவம்பர் 2022 அன்று விமானப்படைத் தலைமையகமான வாயு பவனில் இதற்கான விழா நடைபெற்றது. விமானப்படைத் தலைவர் வி.ஆர்.சௌத்ரி, மூத்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் 12 மின்சார வாகனங்களின் முதல் தொகுப்பினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை கொள்முதல் செய்வதன் மூலம்,  மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. பல்வேறு விமானப்படை தளங்களில் சார்ஜிங் உள்கட்டமைப்பை நிறுவுதல் உள்ளிட்ட மின்-வாகனங்களுக்கான பயன்பாட்டுச் சூழல் அமைப்பை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தொகுப்பு மின்சார கார்கள் செயல்திறன் கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்விற்காக தில்லி தேசிய தலைநகரப் பகுதியில் பயன்படுத்தப்படும்.

தரநிலைப்படுத்தப்பட்ட மின்சார வாகனத் தொகுப்புகளை வாங்குவதன் ஒரு பகுதியாக, மின்சார பேருந்துகள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார்களை வாங்குவது தொடர்பாக, இந்திய விமானப்படை ஏற்கனவே இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்து இயக்கத்தை நோக்கிய பயணத்தில், இந்திய விமானப் படையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply