நடை பயிற்சி சென்ற கேபிள் ஆப்ரேட்டர் சரமாரியாக வெட்டி படுகொலை!-போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம், லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாந்துறை, நெருஞ்சலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாதவன் (வயது 47), இவர் பண்பம் சுற்றி கிராம பகுதியில் சொந்தமாக கேபிள் டிவி நடத்தி வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா தேவி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மஞ்சுளா தேவி, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே மாதவன், நெருஞ்சலக்குடி மாரியம்மன் கோவில் நிர்வாக கமிட்டியில் பொருளாளராக பொருப்பு வகித்து வந்துள்ளார். தனியார் ஆக்கிரமிப்புக்கு உள்ளான 7.5 செண்ட் கோவில் நிலத்தை மீட்கும் பணியில் மாதவன் வருவாய்த்துறையினர் மூலம் அளவீடு செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் மாதவன் நடைபயிற்சி சென்றுள்ளார். மாந்துறை அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே உள்ள கைலாஷ் நகர் பகுதியில் நடந்து சென்றபோது, அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் மாதவனை வழிமறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாதவன் தப்பியோடிய நிலையில் அவரை துரத்திச் சென்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். பின்னர் அவர்கள் இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி துணை காவல் கண்காணிப்பாளர் சீதாராமன் தலைமையிலான போலீசார், கொலையான மாதவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், கொலை நடந்த பகுதிக்கு மோப்ப நாய் அழைத்துவரப்பட்டது. அது, கொலை நடந்த இடத்தில் இருந்து ஓடி லால்குடி – திருச்சி சாலையில் சென்று நின்றது. பின்னர் தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

தொடர்ந்து, இந்த கொலை சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் மாதவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, தனிப்படை போலீசார் தப்பியோடிய கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply