வேளாண்மையே இந்தியர்களின் மைய அடையாளம்; இதுவே நமது பாரம்பரியம், நமது வாழ்வியல்- குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர்.

வேளாண்மையே எப்போதும் இந்தியர்களின் மைய அடையாளமாக திகழ்வதால் வேளாண்துறை மேம்பாடு அடையாமல் நாடு வளம் பெறாது என குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர்  வலியுறுத்தியுள்ளார்.

சண்டிகரில், சிஐஐ வேளாண் டெக் 2022 தொடக்கவிழாவில் திரண்டிருந்த மக்களிடையே  பேசிய அவர், நீடித்த வேளாண் முறைகள் இல்லாமல் நீண்ட கால உணவுப் பாதுகாப்பு  சாத்தியமில்லை என்றார். எனவே, உணவுப்பாதுகாப்பும், நிலைத்தன்மையும் ஒன்றொடொன்று கைகோர்த்து செல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.  குடியரசு துணைத்தலைவராக பதவியேற்ற பிறகு முதன் முறையாக சண்டிகர் வந்துள்ள திரு தன்கர், இந்தியாவின் பாரம்பரியமாகவும், வாழ்வியலாகவும் வேளாண்மை திகழ்கிறது என்றார். கடந்த 75 ஆண்டுகால  வேளாண்மை குறித்து எடுத்துரைத்த அவர், புதிய சவால்களை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில், புதிய வழிமுறைகளை  வேளாண்துறையில் புகுத்த வேண்டியது என்று குறிப்பிட்டார். வேளாண் வளர்ச்சிக்கு புத்தாக்க முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், விலையின் நிலையற்றத் தன்மை, பருவ மாறுபாடு போன்றவற்றிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார். உணவுப்பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்றவற்றில் விவசாயிகள் கவனம் செலுத்தினால் நீடித்த நிலையான வருமானத்தை ஈட்ட முடியும் என்றார்.

உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் உணவுத் தட்டுப்பாடு, தண்ணீர் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு சிறுதானிய சாகுபடியே மிகச் சிறந்த தீர்வு என்று குறிப்பிட்ட திரு தன்கர் , இதனைக் கருத்தில் கொண்டே இந்தியாவின் பரிந்துரையை ஏற்று 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐநா அறிவித்திருப்பதையும் நினைவு கூர்ந்தார்.

இதைத் தொடர்ந்து பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்த உலகளாவிய முன்னாள் மாணவர்கள் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திரு ஜக்தீப் தன்கர், மத்திய அரசின்  தேசிய கல்விக் கொள்கை 2022, வளமடைந்த நாடாக இந்தியாவை மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த விழாவில் பஞ்சாப் ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் திரு சோம் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply