மிசோரம் சட்டப்பேரவையில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரை.

ஐஸால் நகரில்  மிசோரம் சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது வளர்ச்சி என்ற இலக்கை அடைய மலைப்பகுதிகள்  பல்வேறு சவால்களை எதிர்கொள்ள  நேரிடும். ஆனால் அத்தகைய சவால்களை மிசோரம் மாநிலம் முறியடித்து மக்களின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்திருக்கிறது என்றார். கல்வியும் சுகாதாரமும் நல்லாட்சியின் இரண்டு தூண்கள் என்பதால்  அவ்விரண்டு துறைகளில் தலைசிறந்த வசதிகளை உருவாக்க மாநில அரசு முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று திருமதி முர்மு வலியுறுத்தினார்.  கிராமங்களில் சாலை, நெடுஞ்சாலை மற்றும்  பாலங்களை அமைப்பது மக்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

இன்றைய வாழ்வில் நவீன தொழில்நுட்பங்கள்  ஆதிக்கம் செலுத்துவதை நினைவு கூர்ந்த குடியரசுத்தலைவர், மக்களுக்கு  சிறப்பான முறையில் சேவையாற்ற இந்த தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவும் என்றார். கடந்த மே மாதம் மிசோரம் சட்டப்பேரவையின் பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டம்  நடைபெற்றதைச் சுட்டிக்காட்டிய திருமதி திரௌபதி முர்மு,  கடந்த 50 ஆண்டுகளில் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண்பதற்காக ஆரோக்கியமான விவாதம், ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக மிசோரம் சட்டப்பேரவை திகழ்ந்திருப்பதாக பாராட்டினார். மிசோரத்தைச் சேர்ந்த பெண்கள், விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் தொழில்துறைகளில் தங்கள் திறமைகளை நிலைநாட்டி அதிகாரமிக்கவர்களாக பலம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். மிசோரம் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி, நம் தேசத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றார். தேசத்தின் நன்மதிப்பு உலக நாடுகளின் மத்தியில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளிடையேயான இந்திய நல்லுறவு உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் நன்மதிப்பை உயர்த்தியிருக்கிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இந்தியா  உலக நாடுகளுக்கு தலைமை வகித்து உதாரணமாக திகழ்வதாக திருமதி திரௌபதி முர்மு பெருமிதம் தெரிவித்தார். அதே போல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், இந்தியா மேற்கொண்டு வரும் முனைப்பான நடவடிக்கைகள் உலக நாடுகளை  வெகுவாக கவர்ந்துள்ளது. குடிமக்கள், அரசியல்வாதிகள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்து நிர்வாகிகள்  என அனைத்து தரப்பினருமே இந்தப் பூமியை பாதுகாக்கும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என திருமதி முர்மு கேட்டுக் கொண்டார். இந்திய மாநிலங்களில் அதிகமான வனப்பகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலம், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு புகலிடமாக விளங்குவதோடு மட்டுமில்லாமல்  அவற்றின் பல்லுயிர் பெருக்கத்திற்கும் முக்கிய பங்காற்றுகிறது. எனவே இந்த இமயமலையின் சுற்றுச்சூழல்தான்  நமது விலைமதிப்பில்லா பாரம்பரியம். இதனை பேணிப்பாதுகாத்து அடுத்த  தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்று  குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு  தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply