மத்திய மீன்துறை கடல்சார் – பொறியியல் பயிற்சி நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்ஆய்வு.

அரசு அலுவலகங்களில் தேவையற்ற கோப்புகளை நீக்கிட வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் சென்னையில் தெரிவித்தார்.

சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள மத்திய மீன்துறை கடல்சார் – பொறியியல் பயிற்சி நிலையத்தில்  மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் நேரில் பார்வையிட்டு தூய்மை பாரதம் 2.0 குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்வில் அமைச்சர் பேசுகையில், 2014 ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் 2019 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் தூய்மை பாரதம் முதல் கட்டத்தில் பள்ளிகள் மற்றும் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டன. இரண்டாவது கட்டமாக கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி முதல் தூய்மை பாரதம் திட்டம் 2.0 நடைபெற்று வருகிறது. இதன்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேவையற்ற கோப்புகள் நீக்கப்பட்டு, துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். இதன்படி மத்திய மீன்வளம் பொறியியல் பயிற்சி நிறுவனத்தில் தேவையற்ற பொருட்கள் மூலம் அரசுக்கு 90 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும், மேலும் 6 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். சுதந்திரத்திற்கு பிறகு கடந்த 2016 முதல் மீன்வளத் துறைக்கு பல்வேறு கட்டமாக மீனவர் நலனுக்காக நிதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். பிரதமரின் விரைவுசக்தி திட்டத்தின் மூலம் மீனவள மேம்பாடு இணைக்கப்பட்டு சென்னை காசிமேடு துறைமுகம் உள்பட இந்தியாவில் ஐந்து துறைமுகங்கள் நவீனப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பு நிதியில் தமிழகத்திற்கு மட்டும் சுமார் 1800 கோடி ருபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், திருவொற்றியூரில் சூரை மீன்களுக்கென ஒரு துறைமுகம், செங்கல்பட்டு விழுப்புரம் மாவட்டம் இடையே ஒரு துறைமுகம் அமைக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். அதேபோல மீனவர்களுக்கும் கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், கொரோனா காலத்திலும் 32 சதவீத மீன் ஏற்றுமதி நடந்துள்ளதாக தெரிவித்தார். மீன் ஏற்றுமதியில் 2 வது இடத்திலும், இறால் ஏற்றுமதியில் முதல் இடத்திலும் இந்தியா திகழ்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து மத்திய மீன்வள அளவை நிறுவனத்தை ஆய்வு செய்த அமைச்சர், அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மீன் அளவை ஆராய்ச்சி கப்பலில் பயணித்து ஆய்வு செய்தார்.

திவாஹர்

Leave a Reply