இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழகத்தின் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தியாவில் தேவாங்குகளுக்கான முதல் வனவிலங்கு சரணாலயம், தமிழகத்தின் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ளது என்று தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், “தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை, இன்று (அக்.12) புதன்கிழமை, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் நிலத்தை இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அறிவிக்கை செய்துள்ளது.

தேவாங்குகள் சிறிய, இரவு நேர பாலூட்டிகள். அவை மரவகை இனத்தைச் சார்ந்தது. தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மரங்களில் கழிக்கின்றன. இந்த இனம் விவசாய பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை பயக்கின்றன. இந்த இனங்கள் சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், (IUCN) தேவாங்கு இனத்தினை அழிந்து வரும் இனமாக பட்டியலிட்டுள்ளது. இந்த உயிரினங்களின் வாழ்விடத்தை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் இவைகளுக்கான அச்சுறுத்தல்களைத் தணித்தல் ஆகியவற்றின் மூலமே இவைகளின் எண்ணிக்கையைப் பெருக்க இயலும்.

அழிந்து வரும் இந்த தேவாங்குகள் இனத்தை பாதுகாக்க தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், 11,806 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதிகள், தேவாங்குகளின் முக்கிய வாழ்விடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இனத்தை உடனடியாகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த தமிழக அரசு, “இந்தியாவின் முதல் தேவாங்குகளுக்கான வனவிலங்கு சரணாலயம், தமிழ்நாட்டில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டது.

எஸ்.திவ்யா

Leave a Reply