மத்திய சுரங்கத்துறையின் 2-நாள் மாநில மாநாடு ஹைதராபாத்தில் நடத்த முடிவு .

இந்தாண்டு 9.09.2022 மற்றும் 10.09.2022 ஆகிய தேதிகளில் 2- நாள் மாநில மாநாடு ஹைதராபாத்தில் நடத்த மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த மாநில மாநாட்டில் நாடு முழுவதும் நடைபெறும் சுரங்கம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை மேம்படுத்தவும், இந்த துறையில், சமீபத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட கொள்கை சீர்திருத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் விவாதிக்கப்படும்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில், மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி, மத்திய சுரங்கம், நிலக்கரி மற்றும் ரயில்வேத்துறை இணையமைச்சர் திரு ராவ் சாகிப் பட்டேல் தன்வே, மத்திய அமைச்சகங்களின் முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். அடுத்த 25 ஆண்டுகளில் சுரங்கங்களின் மூலம் ஏற்படும் உற்பத்தியின் அளவு உலக அளவிலான தேவையை விட அதிகமாக இருக்கும். மேலும், இந்த மாநாட்டின் மூலம் மத்திய சுரங்கத்துறை மற்றும் பல்வேறு மாநில அரசுகளும் இணைந்து செயல்படுவதற்கான முன்முயற்சியை மேற்கொள்ளும். இந்த மாநாட்டில் சுரங்கத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மாநில அரசுகளால் தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளை (என்எம்இடி) நிதியை திறம்பட பயன்படுத்துதல் போன்றவைகள் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் கர்நாடகா, ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களின் இத்துறை சார்ந்த செயல்பாடுகளும், மாநில அரசுகளின் ஏல நடவடிக்கைகள் மற்றும் தனியார் ஆய்வு நிறுவனங்களுடனான (என்பிஇஏஎஸ்) தொடர்பு குறித்தும் விவாதிக்கப்படும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply