நடிகர் ரஜினிகாந்த் பதாகைக்கு இரத்த அபிஷேகம்!-“ரசிகர்கள்” என்ற போர்வையில் சில அரக்கர்கள்..!-சொல்வதற்கு ஒன்றுமில்லை.

கீழ்காணும் இந்த வீடியோ வன்முறையாகவும், இரத்த களரியாகவும் இருப்பதால், பொது வெளியில் பகிர “‘The you tube” நிறுவனம் அனுமதி மறுத்துள்ளது. வயது வந்தவர்கள் மட்டும், கீழ்காணும் இணைப்பின் மூலம் வீடியோவை பார்க்கலாம்.

https://www.youtube.com/channel/UC8st9C9t0SZiaSYscqSoT-A

கொரோனாப் பேரிடரால் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்துவரும் நிலையில், அனைத்து மத வழிப்பாட்டு தலங்களிலும், வழக்கமான தேர், திருவிழாக்கள் உள்பட, பொதுமக்கள் திரளாக பங்கேற்கும் அனைத்து சுப மங்கள நிகழ்ச்சிகளுக்கும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில், அந்தந்த மாநில அரசுகள் நோய் பரவல் நிலவரத்திற்கு ஏற்றவாறு தடை விதித்து உள்ளது.

இந்நிலையில், ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ”அண்ணாத்த” என்ற திரைப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் ஃபோஸ்டரை செப்டம்பர் 10-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ப்படக்குழுவினர் வெளியிட்டனர். அதை நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதில் எந்த தவறும் இல்லை.

வழக்கமாக பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவருகிறது என்றால், விண் உயர கட்-அவுட்டுகள், ராட்ஷச மலர் மாலைகள், கற்பூரம், பால் அபிஷேகம்.. இப்படி பொதுமக்கள் முகம் சுழிக்கும்படியான காரியங்கள்தான் நடக்கும்.

ஆனால், தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள “அண்ணாத்த” திரைப்பட பதாகைக்கு, பொது வெளியில் ஆடு பலியிட்டு, இரத்தத்தால் அபிஷேகம் செய்து, நாங்கள் இரத்த வெறிப்பிடித்த ரசிகர்கள் என்று நிரூபித்து இருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம், நண்பர் நடிகர் ரஜினிகாந்த் விரும்பமாட்டார்; ரசிக்கமாட்டார்; ஆதரிக்கவும் மாட்டார் என்பது, அவரைப் பற்றி முழுமையாக உணர்ந்த நம்மைப் போன்ற நபர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், அப்பாவி மக்களுக்கு இது தெரியவாய்ப்பில்லை.

ஆடு பலியிடுவது என்பது ஒரு சமூக குற்றமல்ல; அனைத்து மதங்களிலும் நடைபெறும் வழிப்பாட்டு சடங்குகளில் அதுவும் ஒன்றுதான், குறிப்பாக நினைத்தது நடந்து விட்டால் (அல்லது) வேண்டுதல் பலித்து விட்டால், ஒரு குறிப்பிட்ட குலத் தெய்வங்களுக்கும், இஷ்ட தேவதைகளுக்கும் ஆடு, மாடு, கோழிகள் பலியிடுவது.. தொன்றுத் தொற்று நடைப்பெற்று வரும் மரபுதான்.

இதற்கு பௌத்தம் மற்றும் வள்ளலார் வழியை பின்பற்றும் “சத்திய ஞான சபை” போன்ற அமைப்புகள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம்.

சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், வேடர் குலத்தில் பிறந்தவரும், ‘திண்ணன்’ என்ற இயற்பெயரைக் கொண்டவருமான கண்ணப்ப நாயனாரை விட, ஒரு கரடு முரடான உண்மையான கடவுள் பக்தன் இந்த உலகத்தில் இனி யாரும் பிறக்க வாய்ப்பில்லை. இந்த வரலாறு எல்லாம், நண்பர் நடிகர் ரஜினிகாந்த்திற்கு நன்றாகவே தெரியும்.

அதனால்தான் அவர் அறிவித்த ஆன்மீக அரசியலை, நாம் முழுமையாக வரவேற்றோம்; அதை எழுத்துப்பூர்வமாக ஆதரிக்கவும் செய்தோம். ”எதைச் சாப்பிட்டால் பித்தம் தெளியும்” என்று அலைந்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மக்களுக்கு, ரஜினிகாந்த் என்ற ஒரு நல்ல மனிதர் மூலம் விடிவு காலம் பிறக்கும் என்று நாம் முழுமையாக நம்பினோம்.

ஆனால், அவை அனைத்தும் ரஜினிகாந்தின் ஒற்றை அறிவிப்பால் சுக்கு நூறாக உடைந்து போனது.

அதற்கு அவரது உடல் நலமோ; கொரோனா பேரிடரோ; (அல்லது) மத்திய, மாநில அரசுகளின் அரசியல் அழுத்தமோ உண்மையானக் காரணமல்ல. ஏனென்றால், அரசியலுக்கு வந்தால், இவற்றையெல்லாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்பதில் நடிகர் ரஜினிகாந்த் மிகத் தெளிவாகவே இருந்தார்.

இன்னும் வெளிப்படையாக சொல்லப்போனால், நாம் அறிந்தவரை யாருடைய மிரட்டலுக்கும் பயப்படக் கூடிய நபர் ரஜினிகாந்த் அல்ல; ஆனால், அவர் மனச்சாட்சிக்கு மிகவும் பயப்படக் கூடிய நபர்.

இந்த தருணத்திலாவது உண்மையை சொல்வதில் எந்த தவறு இல்லை என்று நான் நினைக்கிறேன்.

“ரஜினி மக்கள் மன்றம்” என்ற போர்வையில் நிர்வாகிகளாக இருந்த நபர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நபர்களைத் தவிர; மற்ற அனைவரும் ரஜினிகாந்தை அரசியல் லேபிலாக பயன்படுத்தி பிழைப்பு நடத்த முயற்சித்தார்கள்.

இந்த உண்மையை மிக தாமதமாக உணர்ந்துக்கொண்ட ரஜினிகாந்த், இதை மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் பல முறை கண்டித்தார். ஆனால், மன்ற நிர்வாகிகள் திருந்துவதாக தெரியவில்லை. இதில் பல நிர்வாகிகள் பிற அரசியல் கட்சிகளுக்கு உளவாளிகளாகவும், மறைமுக ஏஜென்டுகளாகவும் இருப்பதை அறிந்து அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

யாரையெல்லாம் தனது மனச்சாட்சி என்று ரஜினிகாந்த் முழுமையாக நம்பினாரோ; அவர்களில் பெரும்பாலானோர் சுயநல வாதிகளாகவும், நம்பிக்கைத் துரோகிகளாகவும் மாறி இருப்பதைக் கண்டு அதிர்ந்துப் போனார்.

இவர்களை நம்பி “தேர்தல்” எனும் ஓட்டு அரசியலில் குதித்தால், நாம் கரைச் சேர முடியாது; தன்னை நம்பும் தமிழக மக்களுக்கும் ஒன்றும் செய்ய இயலாது என்பதை உணர்ந்துதான், இனி எந்த காலத்திலும் நான் ஓட்டு அரசியலில் ஈடுப்பட மாட்டேன் என்று, அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

அதன் பிறகு அவர் நினைத்தப்படியே அவரிடம் இருந்த பதரெல்லாம் அரசியல் எனும் காற்றில் பல திசைகளில் பறந்துப் போனது.

சில மாதங்களாக சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகர் ரஜினிகாந்திற்கு, தற்போது “அண்ணாத்த” என்ற திரைப்படம் மூலம் “ரசிகர்கள்”- என்ற போர்வையில், சில அரக்கர்கள் செய்த செயல்களால், மீண்டும் பிரச்சனை உருவாகியுள்ளது.

“அண்ணாத்த” திரைப்பட வெற்றிக்காக ஏதாவது ஒரு கோயிலில் உரிய அனுமதிப் பெற்று, ஆடு பலியிட்டு அபிஷேகம் செய்யப்பட்டிருந்தால், இத்தனைப் பிரச்சனைகள் உருவாக வாய்ப்பில்லை.

ஆனால், பட்டப்பகலில் மக்கள் திரளாக கூடும் பொது வெளியில், கொரோனாப் பேரிடர் விதிமுறைகளை துச்சமாக மதித்து, பொது இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என்ற அரசின் கட்டாய உத்தரவை மீறி, ஆடு பலியிட்டு; அந்த இரத்தத்தை நடிகர் ரஜினிகாந்த் பதாகைக்கு அபிஷேகம் செய்து இருப்பது, அராகத்தின் உச்சக்கட்டம். இதை காவல்துறையினர் எப்படி அனுமதித்தார்கள்?!-என்பது தெரியவில்லை. இது தவறான முன் உதாரணம்; இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களுக்கு தாய், தந்தையரை பார்த்துக் கொள்ளுங்கள்; குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்..! என்று கடந்த 40 வருடங்களாக அறிவுரை சொல்லி வருகிறார். அவரை உண்மையாகப் பின்பற்றுகிறவர்கள் இத்தகைய காட்டு மிராண்டித்தனமானச் செயலில் ஈடுப்படமாட்டார்கள்.

தாங்கள் மனிதார நேசிக்கும் நடிகருக்கு, அவப்பெயரை உண்டாக்கும் வகையில், தன் சிந்தனையாலும்; சொல்லாலும்; செயலாலும்; கடமைகள் தவறியதாலும் தீங்கு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் உண்மையான ரசிகர்களாக மட்டுமல்ல; உண்மையான மனிதர்களாகவும் இருக்க வாய்பில்லை.

இதுப்போன்ற நபர்களை இனம் கண்டு உடனே களையெடுக்காவிட்டால், செய்யாதக் குற்றங்களுக்காக நிச்சயம் அவமானத்தை சந்திக்க வேண்டிவரும்.

இது நடிகர் ரஜினிகாந்திற்கு மட்டுமல்ல; எல்லோருக்குமே இது பொருந்தும்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

நடிகர் ரஜினிகாந்த் தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2020/12/04/52256/

Leave a Reply