“ஆன்மீக அரசியல்” என்றால் என்ன?!- நடிகர் ரஜினிகாந்துக்கு “உள்ளாட்சித்தகவல்” ஊடக ஆசிரியரின் உருக்கமானக் கடிதம்.

ரஜினி மக்கள் மன்றத்தின் நிறுவனர் திருமிகு. நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு, அன்பு வணக்கம், புரட்சிக்கர நல்வாழ்த்துக்கள்…!

தங்கள் வாழ்நாளில் இன்று (03.12.2020) ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்கள். ஆம், ஜனவரியில் அரசியல் கட்சித் துவக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளீர்கள். இது உண்மையிலுமே எமக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

இங்கு மதம் சார்ந்த, மொழி சார்ந்த, இனம் சார்ந்த அரசியலை முன்னிறுத்தி, நீண்ட நெடுங்காலமாக மக்களை ஏய்த்து; அரசியலை ஒரு முழு நேரத் தொழிலாகவே கருதி, பிழைப்பு நடத்தி வரும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், அறம் சார்ந்த; மக்களின் நலன் சார்ந்த அரசியலை தாங்கள் முன்னெடுப்பீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதைதான் “ஆன்மீக அரசியல்” என்று தாங்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறீர்கள் என்று நான் கருதுகின்றேன். ஆன்மீகம் என்பது மதம் சார்ந்தது அல்ல; அது மனம் சார்ந்தது; மனிதம் சார்ந்தது. ஆன்மீகம் என்பது இனம், மொழி சார்ந்தது அல்ல; அது அறம் சார்ந்தது. ஆம், ஆன்மாவை வினையில் இருந்தும், அழிவிலிருந்தும் மீட்பது எப்படி என்பதை அறிவதே ஆன்மீகமாகும்.

ஆன்மீகம் என்பது ஆன்மாவைப் பற்றிய ஞானமாகும், உடம்பினுக்குள்ளே குடிகொண்டிருக்கும் ஆன்மாவை, உலகியல் தொல்லைகளிலிருந்தும், பிறவி, பிணி, மரணம் என்ற தளைகளிலிருந்தும் மீட்க, ஆன்மாவாகிய தன்னை உணர்ந்து; இயற்கையோடு இணைந்து செயல்படும் உயரிய உன்னத நெறியாகும். ஆன்மா என்னும் சொல்லுக்கு தமிழில் ‘அகம்’ என்னும் ஒரு பொருளுண்டு. ஆன்மாவை அறிந்து கொள்வதே தன்னை அறிதலாகும்.

அதனால்தான்,

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே.- என்றும்,

தன்னை அறிவதே அறிவாம் அஃதன்றிப் பின்னை யறிவது பேயறிவாகுமே!- என்றும் திருமூலர் கூறுகின்றார்.

ஆன்மாவை ஆயுதங்களால் அழிக்க முடியாது; நெருப்பால் அதனை எரிக்க முடியாது; தண்ணீரால் அதனை இழுத்துச் செல்ல முடியாது; காற்றும் அதனை அலைக்கழிக்க முடியாது; மண்ணால் அதனை மூடமும் முடியாது; ஆம், ஆன்மா என்பது என்றும் அழியாதது; அது அன்பு மயமானது; அதை அழிக்கவும் முடியாது; அது அழிவையும் உண்டாக்காது. ஆன்மீகம் என்பது வெறும் வார்த்தையல்ல; அது நாம் வாழும்முறை…!

இத்தகைய உயரிய உன்னத நெறியை லட்சியமாக முன்னிறுத்தி, தங்கள் அரசியல் பயணத்தைத் தாங்கள் தொடர்வீர்களேயானால்; அதனை ஆதரிக்கவும், அரவணைக்கவும், அங்கீகரிக்கவும், தங்களை அரியணையில் ஏற்றி அழகு பார்க்கவும், நாங்கள் மட்டுமல்ல; தமிழக மக்களும் என்றும் தயாராகவே இருக்கிறார்கள்.

அதற்கு ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், முதலமைச்சர் வேட்பாளராக தங்களை முன்னிறுத்த வேண்டும்; தேர்தலில் நேரடியாக நீங்கள் போட்டியிட வேண்டும். அப்போதுதான் உங்கள் கட்சியை மட்டுமல்ல; உங்கள் லட்சியத்தையும் நீங்கள் வென்றெடுக்க முடியும்.

ஆம், ஒரு மனிதன் முழுமையடைய வேண்டுமானால், நிச்சயம் அவன் தேர்தலில் நின்றே ஆகவேண்டும். அப்போதுதான் மக்களைப் பற்றியும்; தனி மனிதர்களைப் பற்றியும்; அவர்களின் வாழ்வாதாரங்களைப் பற்றியும்; அவர்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றியும் உண்மையாக புரிந்துக் கொள்ள முடியும். உலக நடப்புகளையும் தெரிந்துக் கொள்ள முடியும். கள்ளம் என்றால் என்ன? கபடம் என்றால் என்ன? துரோகம் என்றால் என்ன? துரோகிகள் என்றால் என்ன? எதிர்ப்புகள் என்றால் என்ன? எதிரிகள் என்றால் என்ன? என்ற விபரமெல்லாம் விலாவாரியாக நாம் தெரிந்துக் கொள்ளவும் முடியும்.

மேற்காணும் அனுபவங்களை நீங்கள் நேரடியாக பெற்றால் மட்டுமே, தமிழகத்தில்  நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி மதப் பேதமற்ற ஆன்மீக அரசியலை உருவாக்க முடியும். அப்போதுதான் நீங்கள் நினைக்கும் அதிசயம், அற்புதம் தமிழகத்தில் நிச்சயம் நிகழும்.

‘கற்பு எனப்படுவது யாதெனில் சொன்னச் சொல் தவறாது நடப்பது’!-என்ற அவ்வை மூதாட்டியின் வார்த்தையை உயிராக மதித்து, தங்கள் அரசியல் பயணத்தைத் தொடர்வீர்கள் என்று நான் முழுமையாக நம்புகின்றேன்.

Thiru.-Rajnikanth-@-Shivaji-Rao-Gaikwad

இதுத்தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும். https://www.ullatchithagaval.com/2020/09/07/50366/

One Response

  1. MANIMARAN December 6, 2020 10:44 pm

Leave a Reply