‘உள்ளாட்சித்தகவல்’ விரைவில் நாளிதழாகவும் வெளிவரும்!

(சு) வாசிக்கும் நெஞ்சங்களுக்கு, அன்பு வணக்கம்.

உலகமெங்கும் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கும், தமிழ் பேசும் அன்பர்களுக்கும், இனிய தை திங்கள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்…!

லஞ்சம், ஊழல், முறைக்கேடு, அரசியல் சீர்கேடு மற்றும் சட்ட விரோத, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மிகவும் கடுமையாகப் போராடி வருகின்றோம்.

மேற்காணும் அதே லட்சியத்திற்காகதான், வணிக நோக்கம் எதுவுமின்றி, “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தை சேவை மனப்பான்மையோடு, கடந்த 21 ஆண்டுகளாக  செயல்படுத்தி வருகின்றோம்.

எழுதுவதோடு நமது கடமை முடிந்து விட்டது என்று எண்ணாமல், தீமைகளுக்கு எதிராக மக்களை திரட்டி சட்ட ரீதியாகவும், சத்தியத்தின் வழியாகவும் போராடியும் வருகின்றோம். இதனால் எத்தனையோ மிரட்டல்களையும், பலமுறை இணைய தாக்குதல்களையும், நாம் சந்தித்து இருக்கின்றோம். மானத்தையும், உயிரையும் தவிர, மற்ற எல்லாவற்றையும் இழந்தும் இருக்கின்றோம். இருந்தாலும், நாம் ‘ஊர்குருவி அல்ல..! பீனிக்ஸ் பறவை..’- என்பதை இதுநாள் வரை செயலில் நிரூபித்து இருக்கின்றோம்.

‘பேச்சு பெரிதுதான்! ஆனால், செயல் அதைவிட பெரிது’ என்பதை ஆழமாக உணர்ந்து தொடர்ந்து செயல்பட்டு வருகின்றோம். ‘கற்பு எனப்படுவது யாதனெனில் சொன்னச் சொல் தவறாமல் நடப்பது’ என்ற கொள்கையை உயிர் மூச்சாக கருதி, எமது இதழியல் பயணத்தையும், சமூகப் பணிகளையும், இரு கண்களாக பாவித்து இதுநாள் வரை செயல்பட்டு வந்திருக்கின்றோம்.

இந்நிலையில், நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகம், விரைவில் நாளிதழாகவும் வெளிவரும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எங்களோடு தொடர்ந்து பயணிக்கவும், ஊடகத்துறையில் பணியாற்றவும் விருப்பம் உள்ளவர்களை நாங்கள் மனதார வரவேற்கின்றோம்.

அதற்கு நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்கும் ஒரே தகுதி உண்மை. சிந்தனை, சொல், செயல்… இவை அனைத்திலும் உண்மை இருக்க வேண்டும். ஆம், உயிர்போகின்ற நிலைவந்தாலும் உண்மை மட்டும்தான் பேச வேண்டும்; எழுத வேண்டும். தாங்கள் கற்றக் கல்வியும், பெற்ற அனுபவமும், மற்றவர்களுக்காக பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

டாக்டர் துரை பெஞ்சமின். ஆசிரியர்,  வெளியீட்டாளர் மற்றும் உரிமையாளர்.

எமது இலட்சியப் பயணம்…!

ஒரு கோடி துன்பங்கள் எமைச் சூழ்ந்த போதிலும்
ஒருபோதும் கலங்கமாட்டோம்!
பொருள் கோடி தந்தாலும் புகழ்தேடி வந்தாலும்
பொய்வாழ்வு வாழமாட்டோம்!
கதியில்லா ஏழைகள் கண்ணீரில் குளிக்கையில்
கை கட்டி நிற்கமாட்டோம்!
விதியென்றப் பெயராலே கொடுமைகள் நடக்கையில்
வேடிக்கைப் பார்க்க மாட்டோம்!
துப்பாக்கித் தோட்டாக்கள் எம் நெஞ்சை
துளைத்திட்ட போதிலும் தூரவே ஓடமாட்டோம்!
பாட்டாளி மக்களின் படைவீரனாகுவோம்
பயந்து அஞ்சி நடுங்க மாட்டோம்!
உடல் வருத்தி உழைக்கின்ற ஏழை மக்களை வணங்குவோம்
எவரையும் வணங்க மாட்டோம்!
ஏழ்மையில் வாடுகின்ற குழந்தையைப் பாடுவோம்
எவரையும் துதிப்பாட மாட்டோம்!
எரிகின்ற தீயிலே எம் உடல் வீழ்ந்தாலும்
இலட்சியம் மாறமாட்டோம், சத்தியம் தவறமாட்டோம்!
எழில் மலராய் மக்கள் இதயத்தில் வாழ்வோம்- நாங்கள்
செயல் வடிவில் என்றுமே சாகமாட்டோம்!

 என்றும் தோழமையுடன்,

டாக்டர் துரை பெஞ்சமின்.

ஆசிரியர்,  வெளியீட்டாளர் மற்றும் உரிமையாளர்.

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு ஆபத்து!-பாராளுமன்றத் தேர்தலுடன், கர்நாடகா சட்ட மன்றத்திற்கும் தேர்தல்.
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்! -தமிழக ஆளுநரை சந்தித்த மு.க.ஸ்டாலின்! -கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளது என்ன? -முழு விபரம்.

One Response

  1. Welfare Venkataraman January 15, 2019 7:51 pm

Leave a Reply