ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் கல்வெட்டுகள் அனைத்தையும் கைப்பற்றி ஆய்வு செய்தால், உண்மை உலகுக்கு தெரியும்; போலி பக்த கோ(கே)டிகளின் முகத்திரை முழுமையாக கிழியும்.

திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான திருத்தலமாக விளங்கி வருகிறது.  அரங்கநாத சுவாமி கோயில் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது. இச்சுற்று மதில்களில் 21 வாயில் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோயிலானது ஏறத்தாழ 156 ஏக்கர் அதாவது 6,31,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக, நாட்டிலேயே மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது.

அரங்கநாதரின் கருவறை விமானம், நீள்வட்ட வடிவில் தங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கிறது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது.

இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.

1.7 கோடி செங்கற்கள், 20,000 டன் மணல், 1,000 டன் கருங்கல், 12 ஆயிரம் டன் சிமெண்ட் ,130 டன் இரும்பு கம்பிகள், 8,000 டன் வர்ண பூச்சு, ஆக ஸ்ரீரங்கம் அரங்கநாதர்  கோயில் ராஜகோபுரத்தின் மொத்த எடை ஒரு இலட்சத்து 28 ஆயிரம் டன்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி  கோவிலைப் பாதுகாத்து, திருப்பணிகள் புரிய 1966-ல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) இக்கோயிலுக்குத் தொழிநுட்ப உதவி அளிக்க முடிவு செய்தது. இந்த நிறுவனம் பாட்ரிக் பால்க்னர், ஜார்ஜ்ரைட், ஜுனைன் அபோயர் ஆகிய நிபுணர்களின் சேவையை அளித்தது. இவர்களுள் ஜுனைன் அபோயர் என்ற பெண்மணி, இக்கோயிலின் வரலாற்றையும், அமைப்பையும் நன்கு ஆராய்ந்து பல ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் சங்க காலத்திலிருந்தே புகழ் பெற்று விளங்கியுள்ளது. சிலப்பதிகாரத்தில் அதற்கான விரிவான குறிப்புகள் உள்ளன.

“விரிந்த அலைகளோடு கூடிய மிகப் பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவரும், நீல நிறம் கொண்டவருமாகிய திருமால், ஆயிரம் தலைகளுடைய ஆதிசேஷன் என்னும் பாம்பணையாகிய பள்ளியின் மீது அழகுறச்சாய்ந்து கொண்டிருக்கும் தன்மை, நீல நிறமுடைய ஒரு மேகமானது பொன்மலையினைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கின்றது” என சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் காடுகண் காதையில் வர்ணிக்கப்படுகிறது.

குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி

வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி

கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு

உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.

– என்று ஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார் முதலாயிரம் திருமாலை 19 -வது பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

ஆழ்வார்கள் கால கடைசியில் வந்தவர் கம்பர். அவர் ராமாயணத்தை சாலிவாகன வருடம் அதாவது கிபி 14-ல் ராமாயணத்தை திருவரங்கத்தில் கவியரங்கு ஏற்றினார். அம்மண்டபம் இன்றும் ரங்கநாச்சியார் சன்னதி முன்பு உள்ளது.

“எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின் மேல் சடையன் வாழ்வு நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன் பண்ணிய இராம காதை பங்குனி உத்தரத்தில் கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கு ஏற்றினானே”-என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி  இலக்கிய சிறப்பையும், வரலாற்று புகழையும், ஆன்மீகத்தின் அடையாளத்தையும் ஒருங்கே கொண்ட நகரமாகவும், பூலோக சொர்க்கமாகவும், ஒரு காலத்தில் ஸ்ரீரங்க அரங்கநாதர் சுவாமி திருகோவில் விளங்கியுள்ளது.

ஆனால் இன்று? உண்மையான அரங்கநாதரே அவர்தானா? என்று ஆய்வு செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நினைக்கும்போது நெஞ்சம் பதைக்கிறது.

இந்நிலைவயில், கிணறு தோண்ட போய் பூதம் வெளியான கதையாக, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சிலைகளை ஆய்வு செய்ய நேற்று (06.09.2018) சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு  சென்றபோது, ஸ்ரீரங்கம் அரங்கநாதர்  கோயிலில் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும், அதிகார துஷ்பிரயோகங்களும், அளவுக்கு அதிகமான முறைகேடுகளும் நடைப்பெற்று இருப்பது அம்பலமாகியுள்ளது. 

பழமையான கட்டங்களும், சிலைகளும், புரதான கலைப் பொருட்களும் மற்றும் மர வேலைப்பாடுகளால் ஆனா கதவுகளும், முறையான அனுமதியின்றி மராமத்து மற்றும் புனரமைப்பு என்கிற பேரில் அங்கிருந்து களவாடப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர்  கோயில் நிர்வாகத்தில் தலைமையிடத்தில் முன்பு இருந்த, தற்போது இருக்கும் அதிகாரிகளும், தலைமை பீடத்தில் இருக்கும் அர்ச்சகர்களும், தங்களை தர்ம கர்த்தாக்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு, அரங்கநாதர் கோயில் நிர்வாகத்தையே தன் அப்பன் வீட்டு சொத்துப் போல் ஆதிக்கம் செலுத்தி வந்த நபர்களும், இதற்கு கூட்டு களவாணிகளாக இருந்து செயல்பட்டுள்ளனர் என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

முக்கிய குறிப்பு:

9-ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பல கல்வெட்டுகள் இருந்தன. சோழ மன்னர்களும், சோழ பெரும்புள்ளிகளும், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு பல கொடைகளும், கைங்கர்யமும் செய்துள்ளதாக கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. 9-ம் நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டு வரை 600 -க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இருந்துள்ளது.

இதில் 105 கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. இவை முதலாம் பராந்தக சோழன், இரண்டாம் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன், விக்ரம சோழர்களின் கொடைகள் அனைத்தும் அக்கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டன. ஆனால், அந்த கல்வெட்டுகள் அனைத்தும் இப்போது இருக்கிறதா? என்று தெரியவில்லை.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர்  கோயிலில் இதுவரை நடைப்பெற்ற அனைத்து முறைக்கேடுகளையும் கண்டறிய வேண்டுமானால், அங்கு இருந்த, இருக்கும், களவாடப்பட்ட, சேதப்படுத்தப்பட்ட அனைத்து கல்வெட்டுகளையும் கைப்பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.

அப்போதுதான் உண்மை உலகுக்கு தெரியும். போலி பக்த கோ(கே)டிகளின் முகத்திரை முழுமையாக கிழியும்.

டாக்டர்.துரைபெஞ்சமின்.

சுவடிகள் ஆய்வாளர்,
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply