கல்விராயன்பேட்டை அருகே கல்லணை கால்வாயில் உடைப்பு! -மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவை மதிக்காத பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள்.

கல்விராயன்பேட்டை அருகே கல்லணை கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு.

மேட்டூரில் இருந்து காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும், காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தமிழகத்தின் நெல் களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில், வெள்ளப்பெருக்கால் எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது, கடைமடைப் பகுதி வரை விவசாயத்திற்கு தண்ணீர் போய்சேர வேண்டும் என்பதற்காக, தஞ்சாவூர் நகரம் முதல் கல்லணை வரை 40 கிலோ மீட்டர் தூரம் கல்லணை கால்வாய் கரைப் பகுதிகளை பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை மற்றும் வேளாண்த்துறை அதிகாரிகளுடன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை நேற்று (25.07.2018) நேரில் பார்வையிட்டு கரைகளின் இருபுறமும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதற்கான ஆதாரம் இதோ:

ஆனால், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்ட 24 மணி நேரத்திற்குள் அதாவது இன்று (26.07.2018) காலை 7 மணியளவில் கல்லணையிலிருந்து சுமார் 29 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கல்விராயன்பேட்டை கிராமம், கோனாவாரி பாலம் அருகில், கல்லணை கால்வாய் தென்கரையில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டு, கல்லணை கால்வாயில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் விரையமாகியுள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள 2 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலம் தண்ணீர் சூழ்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது.

கரை உடைத்த இடத்தில், நீரின் வேகத்தால் பல ஏக்கர் நிலங்கள் பள்ளமாகவும், இன்னும் பல ஏக்கர் பரப்பளவு நிலங்கள் மணல் மேடாகவும் ஆகிவிடும். அந்த நிலங்களில் இன்னும் பல ஆண்டுகளுக்கு விவசாயமே செய்ய இயலாது. இந்நிலையில், அந்த நிலங்களின் உரிமையாளர்களின் மனநிலையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித்தொழிலாளர்களின் வேதனைகள் அனைத்தையுமே இங்கு எழுத்துக்களால் எழுதிவிட முடியாது. வாழ்ந்துப் பார்த்தால்தான் அந்த வலி தெரியும்; அவர்களின் வாழ்க்கையும் முழுமையாக புரியும்.

எனவே, மேற்படி கல்லணை கால்வாய் கரை உடைப்பிற்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் அலட்சியமே முக்கிய காரணம். இவர்கள் மீது தமிழக அரசு தயவு, தாட்சணியமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நீர் மேலாண்மை என்பது தமிழகத்தில் கடுகளவும் கிடையாது. ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள், கால்வாய்கள்.. அனைத்தும் முறையாக தூர்வாரவே இல்லை. மேற்படி நீர்நிலைகள் அனைத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில்தான் இன்னும் இருக்கிறதா? என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.

கல்லணையை ஆய்வு செய்யும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை, கல்லணையில் தேங்கியுள்ள வெங்காய தாமரைகள்! நாள்: 25.07.2018.

கல்லணையில் தேங்கிக்கிடக்கும் வெங்காய தாமரைகளைக் கூட அகற்ற முடியாத இவர்கள், வேறு என்ன செய்து கிழிக்கப்போகிறார்கள்?

மக்களின் உழைப்பிலும், வரிப்பணத்திலும், சம்பளம் வாங்கிக் கொண்டு, செய்ய வேண்டிய கடமைகளை முறையாக செய்யாமல், குளிரூட்டப்பட்ட அறையிலும், சொகுசு வாகனத்திலும் சுற்றித் திரியும் அதிகாரிகள் இருக்கும் வரை இதுப்போன்ற ஆபத்துக்களும், அவலங்களும் எந்த ஆட்சி வந்தாலும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply