ஏற்காடு மலைப்பாதையில் பல ஆண்டுகளாக வழிபாட்டில் இருந்து வந்த கிறிஸ்துவ ஆலயத்தை அதிரடியாக அகற்றிய வனத்துறையினர் !

சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு செல்லும் மலைப்பாதையின் 8 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் கிறிஸ்துவ சிற்றாலயம் அமைந்துள்ளது.  சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏற்காடு பகுதியை சேர்ந்தவர்களும், இப்பாதை வழியே பயணிப்பவர்களும் வழிபாடு செய்து செல்வது வழக்கம். வருகின்ற ஜீன் மாதம் திருவிழா நடக்கவிருந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் இந்த சிற்றாலயத்தில் இருந்த சுவாமி சொரூபங்கள் மர்ம நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டது. இதனையறிந்த ஆலய நிர்வாகிகள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணை நிலுவையில் உள்ள சமயத்தில் காவல் துறையினர் ஆலயத்தில் வழிபாடு நடத்த ஏதுவாக சேதமடைந்த பகுதியை சீரமைக்க போதிய ஏற்பாடுகள் செய்யும்படி ஆலய நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். இதனை ஏற்ற ஆலய நிர்வாகிகள் கடந்த ஒரு வார காலமாக ஆலயத்திற்கான கட்டுமான பணிகளை புதுப்பித்து வந்தனர். மேலும் ஆலயத்தை சுற்றி இரும்பு கம்பிகளால் க்ரில் வேலியும், தகட்டினால் மேற்கூரையும் அமைத்திருந்தனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி புதிய சுவாமி சொரூபங்கள் வைத்து ஆலயம் திறக்கப்பட இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் இந்த ஆலய இரும்பு கிரில்களை கழட்டி வனப்பகுதிக்குள் வீசியும், ஆலய கட்டிடங்களை இடித்துள்ளதாகவும் மேலும் மேற்கூரைகளை கழட்டி சென்றதாகவும் ஆலய நிர்வாகத்தினர் ஏற்காடு காவல் நிலைய ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து ஏற்காடு காவல் நிலைய ஆய்வாளர், சேலம் தெற்கு வனச்சரகர் சுப்பிரமணி என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது “ ஏற்காடு காப்புக்காட்டில் வனத்துறை மற்றும் அரசின் அனுமதி இன்றி ஆலய கட்டுமான பணி நடைபெற்று வந்ததால், எங்கள் அலுவலகத்தை சேர்ந்தவர்கள்தான், ஆலயத்திற்கு முன்பு இருந்த இரும்பு வேலியை கழட்டியுள்ளோம். மேற்கூரைகளை எடுத்து வந்து எங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். மேலும் இந்த ஆலய கட்டுமான பணியில் ஈடுப்பட்டவர்கள் மீது நாங்கள் எங்கள் துறை மூலமாக நடவடிக்கை எடுக்க உள்ளோம்.“ என்ற தகவல் விசாரணையில் தெரியவந்தது.

-நவீன் குமார்.

Leave a Reply