ஏ.டி.எம். மெஷின் இங்கு இருக்கு, பணம் எங்கு இருக்கு? -குடவாசல் மக்களின் கூக்குரல்!

திருவாரூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது குடவாசல். இப்பகுதி தேர்வுநிலை பேரூராட்சியாகும். 15 வார்டுகளைக் கொண்ட இப்பகுதி நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக குடியிருப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தாலுக்கா அலுவலகம், டவுன் பஞ்சாயத்து அலுவலகம், யூனியன் அலுவலகம் மற்றும் சார்–நிலை கருவூலமும் இப்பகுதியில் அமைந்துள்ளது. இது வர்த்தகம் நிறைந்த பகுதியாகவும் உள்ளது.

இங்கு பாரத ஸ்டேட் பேங்க், சிட்டி யூனியன் வங்கி, பாண்டியன் கிராம வங்கி போன்றவை செயல்படுகின்றன. வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அளவில் அவர்கள் இருப்பில் இருந்து பணம் எடுத்துக் கொள்ள ஏ.டி.எம். கார்டுகளும் வழங்கியுள்ளனர்.

இதுபோக தபால் அலுவலகங்களில் கணக்கு வைத்திருப்பவர்களும் எந்த வங்கியில் வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. நகரின் இருபுறமும் பெட்ரோல் பங்க்குகளும் உள்ளன. ஒரு நாளைக்கு சுமார் 1,000 பேராவாது ஏ.டி.எம். கார்டுகளைப் பயன்படுத்தி வந்தனர்.

இப்பகுதியில் ஸ்டேட் பாங்க் இரண்டு ஏ.டி.எம்.கள்,  சிட்டி யூனியன் ஏ.டி.எம். மற்றும் டாடா இண்டிகேஸ் ஏ.டி.எம். அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து மக்கள் தேவைக்கு தங்கள் கார்டில் இருந்து பணம் எடுத்து வந்தனர்.

இந்நிலையில், இம்மாதம் (மார்ச்) தொடக்கத்தில் இருந்து இன்று வரை ஏ.டி.எம். மெஷின்களில் போதிய பணம் நிரப்பாதக்காரணத்தால், இந்த ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதைவிட பெரிய  கொடுமை என்னவென்றால், ஒரு சில ஏ.டி.எம்.,களில் லைட் இல்லாததால், இரவு நேரங்களில் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.   மக்களின் பாதுகாப்பும் தற்போது கேள்வி குறியாகியுள்ளது.

எனவே, வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் இருந்து உடனே பணம் எடுப்பதற்கு, சம்மந்தப்பட்ட வங்கி நிர்வாகங்கள் வழிவகை செய்ய வேண்டும்.

-க.மகேஷ்வரன்.

 

 

Leave a Reply