எம்.எல்.ஏ.-க்களுக்கு 100 சதவீதம் சம்பள உயர்வு! அன்றாடம் கூலிவேலை செய்து வாழும் மக்களுக்கு 100 சதவீதம் பஸ் கட்டண உயர்வா?!- மலைவாழ் தோட்ட தொழிலாளர்கள் கண்டன ஆர்பாட்டம்!

நீலமலை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பில், பஸ் கட்டண உயர்வை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம் ஏற்காடு பஸ் நிலையத்தில்  இன்று நடைப்பெற்றது. சங்க தலைவர் பாக்கியம் தலைமை தாங்கினார்.

சங்கத்தின் பொதுச்செயலாளர் நல்லமுத்து கண்டன உரையாற்றினார்.

“எம்.எல்.ஏ. ஆவதற்கு முன்பு பஸ்சில் பயணம் செய்தவர்கள் எல்லாம், எம்.எல்.ஏ. ஆன பின்பு சொந்த காரில் வலம் வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு 100 சதவீதம் சம்பள உயர்வு?!  அன்றாடம் கூலிவேலை செய்து வாழும் மக்களுக்கு 100 சதவீதம் பஸ் கட்டண உயர்வு?!  இது எந்த ஊரு நியாயம்? கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லையா?

இந்த பஸ் கட்டண உயர்வினால் மற்ற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை விட, மலைவாழ் மக்கள் இருமடங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில், மற்ற பகுதிகளை காட்டிலும், மலைப்பகுதிக்கு செல்லும் பேருந்து கட்டணம் இருமடங்கு அதிகரித்துள்ளது.

ஏற்காட்டில் கல்லூரிகள் ஏதும் இல்லாத நிலையில், இங்குள்ள மாணவர்கள் அனைவரும் மேல்படிப்பிற்காக சேலம் செல்வது கட்டாயமாகிறது. இந்த பஸ் கட்டண உயர்வு மலைவாழ் மாணவர்களை பெரிதும் பாதித்துள்ளது.

தினசரி 250 ரூபாய் அளவில் கூலி பெறும் தோட்ட தொழிலாளர்கள், தங்கள் பிள்ளைகளை படிக்க சேலம் அனுப்புவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பஸ் கட்டண உயர்வை, தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையெனில், எங்கள் சங்கம் சார்பில் மக்களைத் திரட்டி பெரும் போராட்டங்கள் நடத்துவோம். ” இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்பாட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மலைவாழ் தோட்ட தொழிலாளர்கள் கலந்துக்கொண்டனர்.

-நவீன் குமார்.

 

 

Leave a Reply