கச்சத்தீவை மீட்பது ஒன்றுதான் நமது மீனவர்கள் தங்கள் பாரம்பரிய பகுதியில் பாதுகாப்பாக மீன்பிடிக்க வழி வகுக்கும் : பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்!

jayalalithaMicrosoft Word - DIPR PR NO 369 Hon'ble CM Do Letter to Hon'ble Microsoft Word - DIPR PR NO 369 Hon'ble CM Do Letter to Hon'bleபிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று (07.07.2014) ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

உங்கள் தலைமையில், மத்தியில் புதிய அரசு பொறுப்பு ஏற்றதும், உங்கள் அரசு, இலங்கை சிறைகளில் இருந்த 184 தமிழக மீனவர்களை மீட்க விரைவான நடவடிக்கை எடுத்தது. அந்த சரியான, உறுதியான நடவடிக்கைக்காக உங்களுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களது 41 எந்திரப் படகுகள் மற்றும் மீன் பிடி கருவிகள் இன்னமும் இலங்கை நாட்டின் வசமே உள்ளன. நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில் இலங்கை அரசு இத்தகைய செயலில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.

தமிழக மீனவர்களின் மீன் பிடி படகுகள் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் கிடந்தால், அவை மீண்டும் பயன்படுத்த முடியாமல் போய் விடும். எனவே, இலங்கையின் இந்த திட்டம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து விடும்.

தமிழக மீனவர்கள் நடுக்கடலில் சட்ட விரோதமாக சிறை பிடித்து செல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இலங்கை கடற்படையினர் அந்த செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் இருந்து 4 எந்திரப் படகுகளில் மீன்பிடிக்க சென்ற 20 தமிழக மீனவர்களை 05–07–2014 அன்று இலங்கை கடற்படையினர் சட்ட விரோதமாக கடத்தி சென்றுள்ளனர்.

அந்த 20 தமிழக மீனவர்களும் இலங்கையில் உள்ள தலை மன்னாருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் நமது மீனவர்கள் பாக் ஜலசந்தியில் பாரம்பரியமாக மீன் பிடிப்பது தொடர்ந்து இலங்கை கடற்படையால் தடுக்கப்படுகிறது. நமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் தவறான அறிவுரையால் செய்யப்பட்ட இந்தியா – இலங்கை ஒப்பந்தங்கள் காரணமாக, நமது அப்பாவி மீனவர்கள் நலன் பற்றி கவலைப்படாமல், கச்சத்தீவு கொடுக்கப்பட்டுள்ளது. இது நமது மீனவர்களின் வரலாற்று உரிமைகளை பறிக்கிறது.

நான் ஏற்கனவே சொன்னது போல, இந்த ஒப்பந்தங்கள் செல்லுபடியாகாது இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.

இந்த நிலையில் கச்சத் தீவு பிரச்சினையை முடிந்து போன ஒன்றாக கருதக் கூடாது என்றும், சர்வதேச கடல் எல்லையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. எனவே கச்சத்தீவை மீட்பது ஒன்றுதான், நமது மீனவர்கள் பாக்ஜல சந்தியில், தங்கள் பாரம்பரிய பகுதியில் பாதுகாப்பாக மீன்பிடிக்க வழி வகுக்கும்.

தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்கும் போது, சிங்கள படை இடையூறு செய்யாமல் இருக்க இலங்கை கடற்படையிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் தமிழக அப்பாவி மீனவர்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

நமது மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். மேலும் 5–1–14 அன்று கடத்தப்பட்ட 20 மீனவர்கள் உள்பட இலங்கை சிறைகளில் உள்ள 37 மீனவர்களையும் 45 மீன்பிடி படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த பிரச்சினையை உங்கள் தலைமையிலான மத்திய அரசு விரைவான, உறுதியான நடவடிக்கை மூலம் தீர்வு காணும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

– டாக்டர்.துரைபெஞ்சமின்.