இலங்கையில் அகதிகளாகப் பதுங்கியிருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்!

paki terrorபாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் இலங்கையைப் புகலிடமாக பயன்படுத்தி, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தீவிரவாதச் செயல்களில் ஈடுப்பட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு, பல ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வருகிறது. இதற்கு இலங்கை அரசாங்கமும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது அதர்ச்சி தரும் தகவலாக உள்ளது.

இலங்கையில் அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தில் கொழும்பு அலுவலகப் பதிவுகளின்படி 2012-ல், 102 பாகிஸ்தானியர்கள் மட்டுமே அங்கு அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், கடந்த வருடம் இது 1,489 ஆகத் திடீரென உயர்ந்திருக்கிறது.

இலங்கையில் அகதிகளாக இருக்கும் சில பாகிஸ்தானியர்களுக்கு, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்புகள் இருப்பதாக தெரிகின்றது.

இலங்கையில் நடைப்பெற்ற யுத்தத்தின் போது, இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ளார்.

இவ்விசாரணைக் குழு விரைவில் இலங்கைக்கு வரவிருக்கிறது என்ற தகவல், இலங்கை அரசாங்கத்திற்கு இப்போது பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.

ஐ.நா.மனித உரிமைகள் விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்து உள்ளனர். அந்த தீர்மானத்தின் மீதான விவாதம், வரும் 17, 18 தேதிகளில் இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. அத்துடன் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பை ஐ.தே.க., ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. பாராளுமன்றத்தின் அனுமதி பெற்றா யுத்தத்தை நடத்தினீர்கள்?என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

எது எப்படி இருப்பினும், இலங்கை நாடாளுமன்றத்தின் தீர்மானம், ஐ.நா.மனித உரிமைகள் விசாரணைக் குழுவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது.

இந்நிலையில் இவ்வளவு காலம் இலங்கையில் சுதந்திரமாகச் சுற்றி திரிந்த பாகிஸ்தான் அகதிகளைக் கண்டு கொள்ளாத இலங்கை அரசாங்கம், ஐ.நா.மனித உரிமைகள் விசாரணைக் குழு இலங்கை வருவதை முன்னிட்டு, பாகிஸ்தான் அகதிகளை தேடி பிடிக்கும் வேலைகளில், இலங்கை குற்றப் புலனாய்வுப் போலிஸாரின் உதவியுடன், இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இரகசியமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

இலங்கை குற்றப் புலனாய்வுப் போலிஸார் தேடுவதை அறிந்த பாகிஸ்தான் அகதிகள் பல பேர், தற்போது தலைமறைவாகியுள்ளனர்.

இலங்கை ‘நேசநாடு’ என்று, இந்தியா எவ்வளவுதான் நட்பு பாராட்டினாலும், இலங்கை அரசாங்கம் பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும்தான் விசுவாசமாக செயல்பட்டு வருகிறது.

கோடி லிட்டர் பசும்பாலை ஊற்றி நிலக்கரிக்கு கும்பாபிஷேகம் செய்தாலும், அவற்றின் கறுப்பு நிறம் வெண்மையாகாது. அதுபோல, இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா எவ்வளவுதான் நன்மை செய்தாலும், இலங்கையின் இந்திய விரோதப் போக்கு என்றைக்குமே மாறாது.

இலங்கை அரசாங்கத்தின் துரோகத்தால் பாதிப்புக்கு உள்ளாகப் போவது, இந்தியாவின் தென் பகுதியில் இருக்கும் தமிழ்நாடுதான். எனவே, இவ்விசியத்தில் இந்திய அரசு எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.