நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு : தொழிலாளி பலி!

nlc  worker rajaNLC-POLICE PRIDUCTION

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளராக பணி புரிந்த ராஜா என்பவர் இரண்டாவது சுரங்க வாயிலில் நண்பரைப் பார்க்கச் சென்றதாகவும் அதற்கு பாதுகாப்புப் படை வீரர் அனுமதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தொழிலாளி ராஜாவின் தலையில் பாதுகாப்புப் படை வீரர், 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ராஜா உயிரிழந்தார்.

 இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் சுரங்க வாயில் முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், பலர் காயமடைந்தனர்.

தொழிலாளர்களின் இரு சக்கர வாகனம் உட்பட பலரது வாகனங்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் அடித்து நொறுக்கினர். இதையடுத்து, உயிரிழந்த தொழிலாளியின் உறவினர்களும் என்.எல்.சி தொழிலாளர்களும் நெய்வேலியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்தியும் தொழிலாளர்கள் கலையாததால், அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் விரட்டினர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளரை துப்பாக்கியால் சுட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் நோமன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நோமன் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

அழகிரி ஆதரவாளர்களுக்கு அன்பழகன் எச்சரிக்கை!
இலங்கை கடற்படை மற்றும் தரைப்படைகளின் ஆதிக்கத்தில் நடைபெற்ற கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா!