கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனத்த மழை: கபினி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

Hogenakkal

Hogenakkal

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு மாதமாக கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி அணை நிரம்பி வழிகிறது. அணைக்கு தற்போது 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அந்த தண்ணீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்படுகிறது.

இதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு தற்போது வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 118.70 அடியாக உள்ளது. அணை நிரம்புவதற்கு இன்னும் 6 அடி மட்டுமே உள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அணையில் இருந்து 5 ஆயிரத்து 442 கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.கபினி அணையில் இருந்து தற்போது சுமார் 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று அதிகாலை தமிழக – கர்நாடக எல்லைப் பகுதியான பிலிக்குண்டுலு வந்து சேர்ந்தது.

நேற்று ஒகேனக்கல்லில் 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை நிலவரப்படி 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறும், அனைத்து அலுவலர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காவிரி கரையோர பகுதிகளிலும், ஒகேனக்கல் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். ஆனால் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இருந்தாலும் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், 5 அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அழகினை அவர்கள் ரசித்து பார்த்தனர்.

ஒகேனக்கல் அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்லாதவண்ணம் நடைபாதையில் போலீசார் தடுப்பு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த 16–ந் தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. பின்னர் இந்த நீர்வரத்து குறைந்து நேற்று முன்தினம் 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை முதல் மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று 18 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் வந்தது.

இன்று காலை 17 ஆயிரத்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கபினி அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் இன்று பிற்பகல் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நேற்று 75.52 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 1 அடி உயர்ந்து 76.75 அடியாக உள்ளது.

அணையில் இருந்து 3 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப் படுகிறது.

கர்நாடக அணை களில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் வேகமாக உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Leave a Reply