பஸ் வீட்டுக்குள் புகுந்து 2 பேர் நசுங்கி சாவு!

bus accisident

திருப்பூர் பி.என். ரோட்டில் சாந்தி தியேட்டர் அருகே தனியாருக்கு சொந்தமான பனியன் ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் திருப்பூர் பெருமாநல்லூர், பாண்டியன் நகர், கணக்கம்பாளையம் பகுதிகளில் உள்ளவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களை நிறுவனத்துக்கு சொந்தமான பஸ்சில் வேலைக்கு அழைத்து வருவார்கள்.

19.07 2013 இரவு 7 மணிக்கு வேலை முடிந்ததும் 60 தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பஸ் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் அமல்ராஜ் ஓட்டிச்சென்றார். திருப்பூர் பி.என். ரோட்டில் உள்ள அண்ணா நகர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

சாலையோர மின் கம்பத்தில் மோதிய பஸ் அங்கிருந்த வெள்ளியங்கிரி என்பவரது வீட்டுக்குள் புகுந்தது. அந்த சமயத்தில் வெள்ளியங்கிரியின் மனைவி மல்லிகாதேவி (வயது 23), தனது 2 வயது மகள் பவளக்கொடியை இடுப்பில் வைத்துக்கொண்டு சமையல் செய்து கொண்டிருந்தார்.

அவர்கள் மீது பஸ் மோதி நசுக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சிறுமியின் தலை துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தில் வெள்ளியங்கிரியும் அவரது மகன் வீரமோகனும் லோசான காயங்களுடன் தப்பினர். பஸ்சில் பயணம் செய்த 11 தொழிலாளர்கள் லேசான காயமடைந்தனர்.

விபத்து பற்றி அறிந்ததும் பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தாய்-மகள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 13 பேரும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து நடந்ததும் டிரைவர் அமல்ராஜ் பஸ்சை நிறுத்தி விட்டு ஓடி விட்டார். போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள். விபத்தின் போது வெள்ளியங்கிரி வீட்டின் முன்பு இருந்த கோழிக்கடையும் நொறுங்கியது. அதிலிருந்த 20 கோழிகளும் இறந்தன.

 

Leave a Reply