கச்சத் தீவு பிரச்னையில் கருணாநிதியின் துரோகம்: முதல்வர் ஜெயலலிதா காட்டம் !

 jayalalithaa tn.cm

கச்சத் தீவு பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதி வழக்குத் தொடர்ந்திருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என்று முதல்வர் ஜெயலலிதா கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும், தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் கச்சத் தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: மேற்கு வங்கத்தின் பெருபாரி பகுதியானது கிழக்கு பாகிஸ்தானுக்கு தாரைவார்க்கப்படுவது உச்ச நீதிமன்றத்தின் மூலம் தடுக்கப்பட்டது. இந்த வழக்கை மேற்கோள் காட்டி கச்சத் தீவு தாரைவார்க்கப்படுவதற்கு முன்பே உச்ச நீதிமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதி அப்போதே வழக்குத் தொடர்ந்திருந்தால் மத்திய அரசின் கச்சத் தீவு தாரைவார்க்கும் செயல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால், இதை கருணாநிதி செய்யவில்லை. கச்சத் தீவு பிரச்னையில் தமிழகத்துக்கு குறிப்பாக தமிழக மீனவர்களுக்கு கருணாநிதி இழைத்த முதல் துரோகம் இது.

இதே பெருபாரி வழக்கைச் சாட்டி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தது சட்டப்படி செல்லத்தக்கதல்ல என உத்தரவிட வேண்டுமென 2008-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அந்த வழக்கில் தமிழக அரசையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்திருந்தேன். ஆனால், அன்றைய தமிழக அரசின் சார்பில் மாநிலத்துக்கு சாதகமான எதிர் உறுதி ஆவணம் ஏதும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, மத்திய அரசு எந்தவித எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்கிறது என்று பார்த்து விட்டு பின்னர் தமிழக அரசின் சார்பில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்து கொள்ளலாம் என்ற மழுப்பலான முடிவை எடுத்தார், கருணாநிதி. இது தமிழகத்துக்கும், தமிழக மீனவர்களுக்கும் அவர் இழைத்த இரண்டாவது துரோகம்.

குறைந்தபட்சம், தான் தாங்கிப் பிடித்திருந்த மத்திய அரசை வலியுறுத்தி, ஒரு அழுத்தம் கொடுத்து தமிழகத்துக்குச் சாதகமான முறையில் பதில் மனுவை தாக்கல் செய்யச் சொல்லியிருக்கலாம். இதையும் கருணாநிதி செய்யவில்லை. உச்ச நீதிமன்றத்தில் எனது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்தது. இது கருணாநிதி செய்த மூன்றாவது துரோகம்.

நான் எடுத்த தொடர் நடவடிக்கைகள்: தமிழகத்தின் முதல்வராக முதல் முறையாக பொறுப்பேற்றது கச்சத் தீவினை மீட்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறேன். 1991-ஆம் ஆண்டிலேயே சுதந்திர தின விழாவில் கச்சத்தீவினை மீட்பேன் என்று சூளுரைத்தேன். அது தொடர்பாக சட்டப் பேரவையில் தீர்மானம் முன்மொழிந்தும், பிரதமருக்கும் கடிதங்களையும் அனுப்பி வைத்தேன். இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதும் நிரந்தரமான குத்தகை என்ற முறையில் கச்சத் தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை மத்திய அரசு பெற்று அதன் வாயிலாக தமிழக மீனவர்களுக்கு அந்தப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை மீண்டும் பெற்றுத் தர வேண்டுமென பிரதமரை நேரில் வலியுறுத்தியுள்ளேன். மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பின், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தமிழக அரசின் வருவாய்த் துறையையும் இணைத்துக் கொள்வதற்கான தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்றச் செய்தேன்.

இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் பேரவையில் மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. துரும்பை கிள்ளிப் போடவில்லை: தமிழக முதல்வராக கருணாநிதி இருந்த போது, கச்சத் தீவை திரும்பப் பெற ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும் என்ற எண்ணம்கூட அவருக்கு இருந்ததில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த வரை கச்சத் தீவை மீட்பதற்காக சுண்டு விரலைக் கூட அசைக்காதவர் கருணாநிதி. ஆட்சி அதிகாரம் பறிபோன பிறகு அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே டெசோ அமைப்பை புதுப்பித்து கூட்டங்களை நடத்துவது, அந்த அமைப்பின் மாநாட்டில் கச்சத் தீவை மீட்க தீர்மானம் நிறைவேற்றுவது, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயல். தான் செய்த தவறை மூடி மறைக்கும் முயற்சி. கருணாநிதியின் பல்வேறு கபட நாடகங்களை தமிழக மக்கள் கண்டு வெறுத்துப் போய் சலிப்படைந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் விலகி, மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டார் கருணாநிதி. ஈழத் தமிழர்களுக்காக மத்திய அரசிலிருந்து வெளியேறியதாக தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொண்டார். இதன்பின், கூட்டணியில் இருந்து வெளியேறியதால் ஈழத் தமிழர்களின் பிரச்னைக்கு விடிவு ஏற்பட்டு விட்டதா என்று அவர் கேள்வி எழுப்பினார். பின்னர், கடந்த மாதம் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ்ஸாடு ஒட்டியிருந்த தன்னை வெட்டி விட்டது யார் என்று விரிவாகப் பேச விரும்பவில்லை என்றார். மத்திய அரசில் இருந்து தான் வெளியேறியது ஈழத் தமிழர்கள் பிரச்னைக்காக அல்ல என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற மக்களை ஏமாற்றுகின்ற, அரசியல் சந்தர்ப்பவாத கபட நாடகங்கள், கண்துடைப்பு நாடகங்கள், மக்கள் மத்தியில் இனி எடுபடாது என்பதை கருணாநிதிக்கு சுட்டிக் காட்டுகிறேன்.

இலங்கைத் தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த மத்திய காங்கிரஸ் அரசுடனான உறவை கூடா நட்பு கேடில் முடியும் என்று கூறி உறவை முறித்துக் கொண்ட ஒரு சில மாதங்களிலேயே தன் மகளின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக மீண்டும் காங்கிரஸிடம் கருணாநிதி மன்றாடியது சுயநலத்தின் உச்சகட்டம். தமிழக மீனவர்களுக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும் கச்சத் தீவு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் கருணாநிதி தாக்கல் செய்யவில்லை என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இந்த விஷயத்தில் தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கும் கருணாநிதிக்கு மக்கள் உரிய பாடம் கற்பிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply