தமிழக அரசுக்கு, மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது : திருமண விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாபேச்சு!

65mgசென்னை ராயப்பேட்டை மைதானத்தில் 15.02.2013 (இன்று) 65 ஜோடிகளுக்கு தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட திருமண வைபவத்தில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கலந்து கொண்டு, மணமக்களுக்கு சீர்வரிசைகளை வழங்கி திருமணத்தை செய்து வைத்தார். பிறகு மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

அப்போது, மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை நான் வகித்து வருகிறேன். நான் சந்திக்காத சோதனைகளா? நான் அனுபவிக்காத துன்பங்களா? நான் எதிர்கொள்ளாத இன்னல்களா? மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

65mrg

தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிற்குத் தேவையான மண்எண்ணையைக் கூட, மத்திய அரசு தர மறுக்கிறது. மின்சாரத்தைத் தர மறுக்கிறது. மத்திய நிதி உதவி மறுக்கப்படுகிறது அல்லது தாமதப்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.க்கான டிஜிட்டல் அனுமதியை தரக்கூட மத்திய அரசு மறுக்கிறது. காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தைக் கூட்டக் கூட உச்ச நீதிமன்றம் சென்று உத்தரவு பெற வேண்டிய நிலை தான் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டு இருக்கிறது.

65mg1

மக்களுக்கு மின்சாரம் வழங்கத் தேவையான கம்பி வடத்தினை காட்டுப் பகுதிக்குள் எடுத்துச் செல்லத் தேவையான அனுமதியை தர மத்திய அரசு மறுத்ததால், உச்ச நீதிமன்றம் சென்று, ஆணைப் பெற்று அதன் பின்னர் தான் மத்திய அரசின் அனுமதி கிடைத்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடக்கூட மத்திய அரசுக்கு மனமில்லை. காங்கிரஸ், பி.ஜே.பி. ஆகிய இரண்டு தேசிய கட்சிகளுக்குமே கர்நாடகாவில் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் இந்த இரண்டு தேசிய கட்சிகளுக்குமே செல்வாக்கு இல்லை. இங்கே தலைகீழாக நின்றாலும், காங்கிரசாலும், பி.ஜே.பி.யாலும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது.

எனவே, காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் இந்த இரண்டு கட்சிகளுமே கர்நாடகாவிற்கு சாதகமாகத் தான் நடந்து கொள்கின்றன. இதில் உள்ள வேதனை என்னவென்றால் “தமிழ்”, “தமிழன்”, “தமிழ்ப் பண்பாடு” என்று கபட நாடகமாடி ஆட்சி அதிகாரத்தை தமிழ் நாட்டில் அனுபவித்து, மத்தியில் இன்னமும் அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறவர்.  இவற்றிற்கெல்லாம் மத்திய அரசுக்கு பக்கவாத்தியம் வாசித்துக் கொண்டிருக்கிறார் என்பது தான். இவற்றையெல்லாம் மீறி, மத்திய அரசு தரும் நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து; எதிரிகளின் தடைகளை தவிடு பொடியாக்கி; தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில், பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி நாம் சாதனை படைத்து வருகிறோம். இந்திய வரலாற்றிலே இதுவரை இல்லாத அளவுக்கு, வறட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு பயிரிழப்புக்காக ஏக்கர் ஒன்றுக்கு, 15,000 ரூபாய் வழங்கி இருக்கிறோம்.

இதனை எதிர்க்கட்சிகளே பாராட்டியுள்ளன. கடந்த 20 மாதங்களில் தமிழக மக்களின் நலன்களுக்காக வியத்தகு சாதனைகளை படைத்திருக்கிறோம். பிற மாநிலங்களுக்கு எடுத்துக் காட்டாக நம் தமிழக அரசு விளங்கி வருகிறது. நமது திட்டங்களை முன் மாதிரியாக பல மாநிலங்கள் கடைபிடித்து வருகின்றன. காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் தர கூட கர்நாடகம் மறுத்தது.

மத்திய அரசு மவுனம் சாதித்தது. பின்னர் நாம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டோம். தொடர்ந்து போராடினோம். ஒரு சொட்டு நீர் கூட தர முடியாது என்று சொன்ன கர்நாடகாவிடமிருந்து 66 டி.எம்.சி. அடி தண்ணீரை நாம் போராடி பெற்று இருக்கிறோம். காவிரியில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்டி இருக்கிறோம். காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை கடந்த ஆறு ஆண்டுகளாக மத்திய அரசிதழில் வெளியிடாமல் மத்திய அரசு மவுனம் சாதித்தது. சுயநலம் காரணமாக அப்போதைய மைனாரிட்டி தி.மு.க. அரசும், இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

நான் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மத்திய அரசை பல முறை வற்புறுத்தினேன். எந்தவிதப் பலனும் கிடைக்க வில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கினைத் தொடுக்க நான் உத்தரவிட்டேன். இதன் விளைவு, 20.2.2013க்குள் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இது நம்முடைய மன உறுதிக்கு, விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி.  இவ்வாறு முதல்- அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

 

Leave a Reply