தமிழக சட்டசபையில் கவர்னர் உரை! தி.மு.க.வெளிநடப்பு!

pr010213aதமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. கவர்னர் ரோசய்யா சரியாக 9.59க்கு சட்டசபைக்கு வந்தார். அவரை சபாநாயகர் தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா 9.51 மணிக்கு வந்தார். 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
10.02 மணிக்கு கவர்னர் ரோசய்யா உரையை வாசிக்கத் தொடங்கினார். கவர்னர் உரை விவரம் வருமாறு:-

மேட்டூர் அனல்மின் உற்பத்தித் திட்டத்தின் 600 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட மூன்றாவது அலகு, சோதனை உற்பத்தியை ஏற்கெனவே தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனமும், தேசிய அனல்மின் உற்பத்தி நிறுவனமும் இணைந்து செயல்படுத்தி வரும் வல்லூர் மின் உற்பத்தித் திட்டத்தின் 500 மெகா வாட் திறனுள்ள முதல் அலகு 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. தலா 500 மெகா வாட் உற்பத்தித்திறன் கொண்ட, இந்த கூட்டுமுயற்சித் திட்டத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது அலகுகள் முறையே 2013-ம் ஆண்டு மார்ச் மற்றும் அக்டோபர் திங்கள் முதல் செயல்படத் தொடங்கும்.

வடசென்னையில் அமைக்கப்பட்டு வரும் தலா 600 மெகா வாட் திறன் கொண்ட இரண்டு அலகு 2013-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதம் முதல் செயல்படத் தொடங்கும். மின் உற்பத்தி நிலையங்களை திறம்பட இயக்கியும், மின்சார சந்தைகள் மற்றும் இதர ஆதாரங்களிலிருந்து மின்சாரத்தை வாங்கியும் தற்போது மின்தடை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

மண்டலங்களுக்கு இடையே மின்சாரம் கடத்தும் திறனுக்கான இணைய ஒப்பந்தப்புள்ளியில் பங்கெடுத்து, 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 500 மெகா வாட் அளவிற்கு மின்வழிப் பாதையைப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான நிறுவனம் வெற்றி கரமாக ஒப்பந்தம் பெற்றுள்ளது.

தென்மண்டலத்திற்கு வெளியே ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு, மின் வழித்தட தொடர் இணைப்பு கிடைக்காததால் பயன்படுத்த இயலாதிருந்த மின்சாரத்தைத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான நிறுவனம் பெற்று பயன்படுத்த இது வழி வகுத்துள்ளது. இத்தோடு, அதிக மின்சாரம் தேவைப்படும் மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் ஒடிசா மாநிலத்திலிருந்து 150 மெகா வாட் மின்சாரம் பெறப்பட்டுள்ளது.

2013-ஆம் ஆண்டு ஜுன் திங்கள் முதல் மூன்றாண்டுகளுக்கு 500 மெகாவாட் மின்சாரம் பெறுவதற்கான நடுத்தர காலக் கொள்முதல் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள 660மெகாகவாட் எண்ணூர் விரிவாக்கத் திட்டத்திற்கு ஏற்கனவே உலகளாவிய ஒப்பந் தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. உடன்குடி மற்றும் எண்ணூரில் 2,640 மெகாவாட் மொத்த உற்பத்தித் திறன் கொண்ட, தலா 2×660 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் விரைவில் கோரப்படும். சூரிய மின்சக்திக்கு இலக்கிடப்பட்டுள்ள 3 ஆயிரம் மெகாவாட் உற்பத்தியை இந்த அரசு எட்டும்.

மத்திய அரசு 18.1.2013 முதல் அரசு போக்குவரத்துக் கழகங்கள் பெறும் மொத்த டீசல் கொள்முதல் மீதான மானியத்தை முற்றிலும் விலக்கிக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையால் எரிபொருள் செலவு மீண்டும் 23.75 சதவீதம் உயர்ந்து இவ்வுயர்வால் மட்டும் ஆண்டுக்கு 744 கோடி ரூபாயும், ஏற்கனவே ஏற்பட்டுள்ள கூடுதல் செலவையும் சேர்த்து நான்கு மாதத்திற்குள் ஏற்பட்ட மொத்த விலை உயர்வால் 1,127 கோடி ரூபாய் அளவிற்கு ஒரு ஆண்டுக்கான எரிபொருள் செலவு உயர்ந்துள்ளது.

இது மாநில போக்குவரத்து கழகங்களை நிதிப் பேரழிவின் விளிம்பிற்கே கொண்டு சென்று விட்டது. மத்திய அரசின் இந்த இரட்டை விலை நிர்ணயிப்புக் கொள்கை பொது நலனுக்கு எதிரானது. மானியத்தோடு கூடிய எரிபொருளை தனியார் பேருந்து நிறுவனங்கள் தொடர்ந்து பெறும் நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மட்டும் இது பாதகமாக உள்ளதாலும், இதை எதிர்த்து உரிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.  இவ்வாறு கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.

 தி.மு.க.வெளிநடப்பு:

stalinகவர்னர் உரையை வாசித்தபோது தி.மு.க. சட்டசபை தலைவர் மு.க. ஸ்டாலின் எழுந்து நின்று ஏதோ ஒரு உரையை வாசித்தார். அதே நேரத்தில் கவர்னர் பேச்சுக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் மேஜையை தட்டினார்கள். கவர்னர் தன் உரையை வாசித்துக் கொண்டிருக்கும் போதே மு.க.ஸ்டாலினும் ஏதோ ஒன்றை படித்தார். மு.க.ஸ்டாலின் தாளில் உள்ளதை படித்து முடிக்கும் வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டிக் கொண்டே இருந்தனர். இதனால் கவர்னர் உரையாற்றியதும், மு.க.ஸ்டாலின் பேசியதும் என்னவென்றே யாருக்கும் தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் வாசித்து முடித்ததும் வெளிநடப்பு செய்வதாக கூறினார். அவர் தலைமையில் தி.மு.க.வினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply