தயாநிதி மாறனை கைது செய்ய செப்டம்பர் 14-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை !

DAYANIDHI MARANsr%206582-658315p2

பி.எஸ்.என்.எல். இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சி.பி.ஐ தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

அதேவேளையில், 6 வாரங்களுக்கு வழங்கிய இடைக்கால முன் ஜாமீனை, நிரந்தர ஜாமீனாக வழங்க வேண்டும் என தயாநிதிமாறன் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், சி.பி.ஐ. கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, தயாநிதி மாறனின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்ததோடு, 3 நாட்களுக்கு சரணடைய வேண்டும் என தயாநிதிமாறனுக்கு அவகாசம் அளித்தது.

இந்நிலையில், முன் ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தயாநிதிமாறன் நேற்று (11.08.2015) மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு  இன்று (12.08.2015)  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். தாகூர், வி.கோபால கவுடா, ஆர். பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.

இதனையடுத்து  தயாநிதி மாறன் முன்ஜாமீனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த மாதம் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

-எஸ்.சதிஸ்சர்மா.