தமிழ்நாட்டில் தனிப்பெருபான்மையோடு ஆட்சி அமைக்க என்ன வழி?!-தமிழக மக்களின் உண்மையான மனநிலை என்ன?!- வெற்றி வாய்ப்புக்கான உண்மையான (FORMULA) சூத்திரம்.

‘உள்ளாட்சித்தகவல்’ ஊடகத்தின் ஆசிரியர் Dr.துரைபெஞ்சமின்.

ஒரு  நாட்டின் வளர்ச்சி என்பது, நாட்டு மக்களையெல்லாம் கொன்றுவிட்டு அவர்கள் பிணத்தின் மீது ஏறி கை உயர்த்துவது  அல்ல! மாறாக, மக்களுக்கான நல்ல வளர்ச்சி திட்டங்களையும், அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பில்லாதவாறு வரிகளை விதித்து, ஒரு வீட்டின் ஒட்டு மொத்த  பிரச்சனைகளையும், சுமைகளையும் அந்த வீட்டின் தலைவன் ( தந்தை) தாங்கி கொள்வதை போல; நாட்டு மக்களின் அனைத்து  பிரச்சனைகளையும், சுமைகளையும் தலைமை பீடத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் தாங்கி கொள்ளவேண்டும்.

ஏனென்றால் ஆட்சி அதிகாரம் என்பது மலர் கிரீடம் அல்ல! அது ஒரு முள் கிரீடம்! இதை நாட்டை ஆளுகின்றவர்களும்; நாட்டை ஆளத் துடித்துக்கொண்டிருப்பவர்களும் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு அரசாங்கம் மக்களுக்கு சேவை மட்டும் தான் செய்ய வேண்டுமே தவிர; மக்களிடம் வியாபாரம் செய்ய கூடாது.

மேலும், மக்களின் நலன் கருதி நல்ல கருத்துகளை யார் கூறினாலும், அதை அவசியம் செவி கொடுத்து கேட்க வேண்டும்.

அதனால்தான்,

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு
.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

– என்கிறார் திருவள்ளுவர் பெருந்தகை.

இதற்கெல்லாம் வரிசை பிரகாரம் என்ன அர்த்தம் தெரியுமா?!

அரசன், குறைகளைத் தெரிவிக்கவரும் குடிமக்களுக்குக் காண்பதற்கு எளியவனாகவும், கடுஞ்சொல் இல்லாதவனாகவும் இருப்பானானால், அவ்வரசனது நாட்டை உலகத்தவர் உயர்வாகக் கூறுவர்.

குறை கூறுபவரின் சொற்கள், தன் காதுகட்குக் கசப்பாயிருப்பினும், அவற்றின் பயன்கருதி அவற்றைப் பொறுத்துக்கொள்ளும் பண்புடைய அரசனின் குடைக்குக் கீழ் உலகம் முழுதும் தங்கும்.

இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு, இந்த உலகத்திலேயே அவன் விரும்பிய பொருளெல்லாம் கிடைக்கும்.

நீதிசெலுத்தி மக்களை வருத்தாமல் காக்கின்ற அரசன், பிறப்பால் மனிதனாயினும் செயலினால் கடவுள் என்று மதிக்கப்படுவான்.

என்கிறார் திருவள்ளுவர் பெருந்தகை.

அது சரி, தமிழ்நாட்டின் தேர்தல் வெற்றிக்கு வழி என்ன என்பதை பார்ப்போம்.

நாட்டின் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாகவும்; ஏழை, நடுதர மக்களின் வாழ்க்கைக்கு மிகப் பெரிய சவாலாகவும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு இருந்து வருகிறது.

இதனால் கட்டுமான பணிகளில் ஈடுப்பட்டு வரும் உடல் உழைப்பு மற்றும் மரபுசாரத் தொழிலாளர்களுக்கும், தனியார் நிறுவனங்களில் தற்காலிக மற்றும் நிரந்தரமாக பணிக்கு செல்லும் நபர்களுக்கும் மற்றும் அன்றாட தினக் கூலி தொழிலாளர்களுக்கும், வேலைக்கு செல்வதற்கான பயணச் செலவு மற்றும் பேருந்து  கட்டணத்திற்காக அவர்களின் தினசரி சம்பளத்தில் இருந்து சுமார் 40 முதல் 70 சதவீதம வரை செலவிட்டு வருகிறார்கள்.

இதில் வேதனை என்னவென்றால், இலவசமாகக் கிடைக்கும் அரிசியை வேகவைத்து சாப்பிடுவதற்கு, மாதந்தோறும் சமையல் எரிவாயுக்காக 1000 ரூபாய் செலவு செய்ய வேண்டிருக்கிறது.

எனவே, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை நிரந்தரமாக குறைத்தால் மட்டுமே இப்பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

ஆனால், மத்திய அரசு அதற்கான எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவும் இல்லை; இனி எடுக்கப்போவதாகவும் தெரியவில்லை.

ஒட்டு மொத்த எரி பொருள் விலை உயர்வுக்கும், எண்ணெய் நிறுவனங்கள் தான் காரணம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல; மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் தான் நம் நாட்டு மக்களின் தலையில் இடியாக வந்து விழுகிறது.

கொரோனா (Covid-19) வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவ தொடங்கியபோது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 65 டாலராக இருந்தது. அதற்குப் பிறகு வந்த ஊரடங்கினால், அதன் விலை வெகுவாகச் சரிந்து 25 டாலர் வரை கீழே இறங்கியது. அந்தத் தருணத்தில் அரசு பெட்ரோலின் விலையை 25 ரூபாய் அளவுக்குக் குறைத்திருக்க வேண்டும்.

ஆனால், அதற்கு மத்திய அரசுக்கு மனதில்லை. ஆகவே 19 ரூபாய் அளவுக்கு சுங்கவரியும், சிறப்பு வரியும் விதித்தார்கள். ஆகவே பெட்ரோலின் விலை அதே இடத்தில் நீடித்தது.

அரசுக்கு இரு வகைகளில் வரி வருகிறது. ஒன்று நேர்முக வரி; மற்றொன்று மறைமுக வரி. ஒரு நேர்மையான அரசு என்பது, மறைமுக வரியைக் குறைவாகவும், நேர்முக வரியை அதிகமாகவும் வசூலிக்க வேண்டும். ஏனென்றால், நேர்முக வரியை ஏழை, எளிய, சாமானிய மக்கள் யாரும் செலுத்த மாட்டார்கள்; வசதியுள்ள பணம் படைத்த நிறுவனங்களுக்கு மட்டுமே நேர்முக வரி விதிக்கப்படும்.

ஆனால் நமது மத்திய அரசு மறைமுக வரியை வைத்துக்கொண்டு; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான நேர்முக வரியைக் குறைத்தது. 36 சதவீதம் இருந்த வரி 25 சதவீதமாகக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைக்கப்பட்டது. இது 2020-ல் நடந்தது. இதனால், அரசின் வருவாயில் 1 லட்சத்து 55 ஆயிரம் கோடி குறைந்தது. இந்த இழப்பை எங்காவது ஈடுகட்ட வேண்டுமென கருதிய மத்திய அரசு, பெட்ரோலுக்கும், டீசலுக்கும் கடுமையாக வரி விதித்து. இந்த வரியை ஏழை, எளிய, சாமானிய மக்களிடம் தொடர்ந்து வசூலித்து வருகிறது.

போதாதக்குறைக்கு மாநில அரசு தன் பங்குக்கு பெட்ரோல், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 100 சதவீதத்திற்கு மேல் வரி விதித்து வசூலித்து வருகிறது. இது தான் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

மேலும், சரக்கு கட்டணம் உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு, மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு இவை அனைத்தும் ஏழை, எளிய ,சாமானிய மக்களின் பொருளாதாரத்தை கடுமையாக தொடர்ந்து சீரழித்து வருகிறது.

இந்த பிரச்சனைனகளில் இருந்து மக்களை விடுவிக்காத வரை, எத்தனை இலவச திட்டங்களை அறிவித்தாலும், நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வாய்ப்பில்லை.

இதற்கு ஒரே தீர்வு:

ஒரு லிட்டர் பெட்ரோல் 65 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 60 ரூபாய்க்கும் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.650 க்கும் வழங்க வேண்டும். இந்த விலை நிர்ணயத்தில் அடுத்து  5 ஆண்டுகளுக்கு எந்த மாற்றமும் இருக்காது. இந்திய அரசின்  எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தினாலும், குறைத்தாலும் தமிழகத்தை பொருத்தவரை எந்த மாற்றமும் இருக்காது என்பதை எழுத்துப் பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

மேலும், கட்டுமான பணிகளில் ஈடுப்பட்டு வரும் உடல் உழைப்பு மற்றும் மரபுசார தொழிலாளர்கள், தனியார் நிறுவனங்களில் தற்காலிக மற்றும் நிரந்தரமாக பணிக்கு செல்லும் நபர்கள் மற்றும் அன்றாட தினக்கூலி தொழிலாளர்கள் ஆகியோருக்கு, அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கு இலவச அனுமதி வழங்கப்படும் என்பதையும் எழுத்துப் பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

இதனால், ஏழை. எளிய, சாமானிய மக்களின் பயணச் செலவு முற்றிலும் தடுக்கப்படும். இலவச பயணம் என்பதால் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த அனைவரும் முன்வருவார்கள்; இதனால் தனி நபர்களின் வாகன பயன்பாடு சாலையில் வெகுவாக குறைந்து விடும். மேலும், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு; விபத்துகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிடும். இதனால் வாகனங்களின் இருந்து வெளிப்படும் நச்சுப் புகையின் அளவும் குறைந்து சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும்.

மேற்காணும் இரண்டு வாக்குறுதிகளை யார் அறிவிக்கிறார்களோ; அவர்களுக்கு வெற்றி நிச்சயம்! மேலும், இதற்கு சாதி, மத, மொழி மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு வாக்களிக்க பெரும்பான்மையான தமிழக மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

மேற்காணும் இரண்டு வாக்குறுதிகளை அறிவித்தாலே போதும்; ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டியதில்லை! வேறு எந்த இலவசங்களும் தமிழக மக்களுக்கு தேவையுமில்லை.

உங்களுக்கும், மக்களுக்கும் நல்ல காலம் வருவது; இந்த அறிவிப்பின் மூலமாகதான் நடக்கும் என்பதை, இங்கு நாங்கள் உறுதியாக பதிவு செய்கின்றோம்.

முக்கிய குறிப்பு: மேற்காணும் இரண்டு வாக்குறுதிகளையும் திட்டங்களாக நிறைவேற்றுவதற்கு தேவையான நிதி ஆதாரங்களுக்கு நேர்மையான முறையில் ஆயிரம் வழிகள் இருக்கிறது..! அதற்கு நாங்கள் 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்கின்றோம்.

நிதி ஆதாரங்களுக்கு வழி காட்ட நாங்கள் தயார்…! -வாக்குறுதி அளிக்க நீங்கள் தயாரா?!

–Dr.துரைபெஞ்சமின்.
Ex . Honorary A.W. officer, Govt Of India
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
Mobile- 9842414040

One Response

  1. MANIMARAN April 4, 2021 2:33 pm

Leave a Reply