கோவா தலைநகர் பனாஜியில், ஜூன் 26 அன்று, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், கோவாவின் புதிய ‘கேப்டன் ஆஃப் போர்ட்ஸ்’ எனப்படும் துறைமுக முனையக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
ரூ 48.87 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடம், கடல்சார் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், கப்பல் கண்காணிப்பு, கடல்சார் போக்குவரத்தை மேம்படுத்தவும், நீடித்த கடல்சார் வர்த்தக வளர்ச்சிக்கான மாநிலத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோவா மாநில உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்தக் கட்டிடம் (தரைத்தளம், 3 மேல் தளங்கள்), 4,405 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது. கடல்சார் துறையின் வளர்ந்து வரும் செயல்பாட்டுத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லாத பழைய அலுவலகத்திற்கு மாற்றாக இந்த புதிய முனையக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. நதிக்கரையில் நிறுத்தப்பட்ட கப்பலின் உருவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய முனையம், மண்டோவி நதியை நோக்கியவாறு அமைந்துள்ளது. இது ஒரு நிர்வாக மையமாகவும், கோவாவின் கடல்சார் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் ஒரு அடையாளச் சின்னமாகவும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சியில், கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், மத்திய மின்சாரம், புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக், கோவா துறைமுகங்கள் துறை அமைச்சர் திகம்பர் காமத், கோவா நதிநீர்வழிப் பாதைகள் துறை அமைச்சர் சுபாஷ் ஃபால் தேசாய், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மூத்த அரசு அதிகாரிகள், கடல்சார் துறைப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், இந்த புதிய முனையம், அரசு கட்டிடத்தை விட வசதியானது என்று கூறினார். இன்று, ஒரு துறைமுக முனையக் கட்டிடத்தை திறந்து வைப்பதுடன், கோவாவின் கடல்சார் அடையாளம், நவீனமயமாக்கல் நடவடிக்கைகளுக்கான அதன் அர்ப்பணிப்பு, நிலையான, மக்களை மையமாகக் கொண்ட சிறந்த எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் அடையாளமாக உள்ளது என்று தெரிவித்தார்.
நதிக்கரையில் நீடித்து உழைக்கும் தன்மையை உறுதி செய்வதற்காக, எஃகு, வலுவூட்டப்பட்ட கான்கிரீட் கலவை கட்டமைப்பைப் பயன்படுத்தி, பைல் ஃபவுண்டேஷன் முறையில் இந்த புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. ‘கேப்டன் ஆஃப் போர்ட்ஸ்’ துறையின் அலுவலகம் மட்டுமின்றி, நவீன பயணியர் வசதிகள், இரண்டு தளங்களின் உயரத்தைக் கொண்ட பொது வரவேற்பறை, மாநாடு நடத்துவதற்கான வசதிகள், கடல்சார், நீரியல் வரைபட அலுவலகங்கள், வழிசெலுத்தல் கட்டுப்பாட்டு உள்கட்டமைப்பு, வானொலி தகவல் தொடர்பு மையம், பொது வசதிகள் ஆகிய அனைத்தும் இதில் அடங்கும். 450 பேர் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம், உள்ளரங்க உணவகம், ஆகியவையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொது, கடல்சார் நிகழ்வுகளை நடத்த முடிவதுடன், இத்துறைக்கு கூடுதல் வருவாய் வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.
திவாஹர்
