ஜீனோம் இந்தியா இயக்கம், இந்தியாவில் தனிப்பயனாக்கப்பட்ட சுகாதாரப் பராமரிப்பிற்கான அடித்தளத்தை அமைக்கும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் (இவர் புகழ்பெற்ற மருத்துவரும், நீரிழிவு நோய் நிபுணரும் ஆவார்), எதிர்காலதிற்கான துல்லிய மருத்துவ சிகிச்சைகள் குறித்த நடைமுறைகளை எடுத்துரைத்தார். மரபணு சிகிச்சை, கதிரியக்க மருத்துவ சிகிச்சை, இதர வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மூலம், உலகளவில், சுகாதாரத் துறையில் உள்ள சவால்களுக்கு, உள்நாட்டிலேயே தீர்வுகளை இந்தியா உருவாக்கி வருவதாகவும், இதன் மூலம் அதிநவீன சுகாதாரப் பராமரிப்புப் புத்தாக்க நடவடிக்கைகளுக்கான உலகின் மையமாக நிலைநிறுத்திக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவின் பரந்து விரிந்துள்ள மரபணு பன்முகத்தன்மை, மாறுபட்ட நோய்ப் பரவல் தன்மை, வேகமாக விரிவடையும் அறிவியல் திறன்கள் ஆகியவை, நாட்டில் உள்ள நோயாளிகளுக்கு ஏற்ற உள்நாட்டு மருத்துவ சிகிச்சைகளுக்கானத் தரவுகளை உருவாக்குவதற்கும், அதே வேளையில் மலிவு விலையில், உலகளவில் பொருத்தமான சுகாதாரத் தீர்வுகளை வழங்குவதற்கும், முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பை அளிக்கின்றன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

மருத்துவர்கள் தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர், சுகாதாரத் துறை மாற்றத்திற்கான சகாப்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளதாகவும், இதில் சிகிச்சை முறை தனிநபரின் மரபணு அமைப்பு, வாழ்வியல் முறை, சுற்றுச்சூழல் காரணிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படும் என்றும் கூறினார். துல்லிய மருத்துவ சிகிச்சை, தனிப்பயனாக்கப்பட்ட சுகாதாரப் பராமரிப்பு ஆகியவை மிகவும் துல்லியமாக நோயறிதல், இலக்கு சார்ந்த சிகிச்சைகள், மேம்பட்ட சிகிச்சை முடிவுகளைச் சாத்தியமாக்குவதன் மூலம், மருத்துவ நடைமுறையின் எதிர்காலத்தை மறுவரையறை செய்யும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பன்முகத்தன்மையே அதன் மிகப்பெரிய அறிவியல் ரீதியான வலிமையில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார். இந்தியாவில் பல்வேறு பிராந்தியங்களில் அசாதாரண அளவிலான மரபணு மாறுபாடுகள், நோய் வடிவங்களைக் கொண்டுள்ளது என்றும், இது உயிரி-மருத்துவ ஆராய்ச்சிக்கான மகத்தான வாய்ப்புகளை உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார். இந்தத் தனித்துவமான சாதகமான சூழல், நாட்டின் சுகாதாரச் சவால்களை எதிர்கொள்வதுடன், உலகளவிலான சமூகத்திற்கும் பயனளிக்கும் தீர்வுகளை உருவாக்கவும் உதவுகிறது என்று அவர் கூறினார்.

‘ஜீனோம் இந்தியா இயக்கம்’ ஏற்கனவே 10,000-க்கும் மேற்பட்ட தனிநபர்களின் மரபணு வரிசைப்படுத்தலை நிறைவு செய்துள்ளது என்றும், உலகின் மிகப்பெரிய மரபணுத் தரவுத்தளங்களில் ஒன்றை உருவாக்கும் பணியில் முன்னேறி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். இத்தகைய முன்னேற்றம், மரபணு சார்ந்த கோளாறுகள், அரிய நோய்கள், தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைகள் மீதான ஆராய்ச்சியை வலுப்படுத்துவதுடன், துல்லிய மருத்துவ சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

Leave a Reply