செயற்கை நுண்ணறிவு, அணுசக்தி, விண்வெளி, குவாண்டம் தொழில்நுட்பங்கள் ஆகியவை எதிர்கால வளர்ச்சியை, உலகளாவிய போட்டித்திறனை தீர்மானிக்க உள்ளதாக மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம் , பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
2023-ல் தொடங்கப்பட்ட தேசிய குவாண்டம் இயக்கம், மூன்று ஆண்டுகளுக்குள் அதன் இலக்குகளில் பாதிக்கும் அதிகமானவற்றை ஏற்கனவே அடைந்துவிட்டதால், முன்னணி தொழில்நுட்பங்களில் ஒரு முக்கிய சக்தியாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்று அமைச்சர் மேலும் கூறினார்.
புதுதில்லியில் முன்னணி செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாட்டின் கலந்துரையாடலில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியா தற்போது பல முக்கிய தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடுகளுக்கு இணையாக முன்னேறி வருவதாகவும், அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சி, தேசியப் பாதுகாப்பு, உலகளாவிய போட்டித்திறன் ஆகியவற்றை வரையறுக்கும் திறன்களைத் தொடர்ந்து கட்டமைத்து வருவதாகவும் கூறினார்.
நவீன உலகில் தொழில்நுட்ப முன்னேற்றமே வளர்ச்சியின் பிரதான உந்துசக்தியாக மாறியுள்ளது என்றும், புத்தாக்கத்தையும் முன்னணித் தொழில்நுட்பங்களையும் ஏற்றுக்கொள்ளாமல் எந்தவொரு நாடும் நீண்டகால வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது என்றும் அமைச்சர் கூறினார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, ஜனநாயக விழுமியங்கள், சமூக நலன் ஆகியவற்றில் உறுதியாக இருக்கும் அதே வேளையில், இந்தியா இந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான கொள்கை சீர்திருத்தங்கள், புத்தாக்கம், தொழில்முனைவு மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளன. விண்வெளித் துறையைத் தாராளமயமாக்கியது ஏற்கனவே ஒரு துடிப்பான புத்தொழில் சூழலமைப்பை உருவாக்கியுள்ளது என்றும், அதே நேரத்தில் அணுசக்தித் துறையில் சமீபத்திய கொள்கை முன்னெடுப்புகள், உத்திசார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்துறையில் முதலீடுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் திறன் உருவாக்கத்தை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
கல்வி, ஆராய்ச்சி, விண்வெளி, அணுசக்தி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் மூலம் இடப்பட்ட அடித்தளம், 2047-க்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும் பயணத்தை வலுப்படுத்துவதோடு, உலகின் முன்னணி புத்தாக்கத்தால் உந்தப்படும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் நாட்டை நிலைநிறுத்தும் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
திவாஹர்
