ஐக்கிய ராச்சியத்தில் தனது வெற்றிகரமான சந்திப்புகளைத் தொடர்ந்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இருதரப்பு வர்த்தகம், முதலீட்டுப் பாய்ச்சல் மற்றும் மூலோபாயப் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தி, தற்போது கிரீஸின் ஏதென்ஸுக்கு ஒரு உயர்மட்ட இந்திய வர்த்தகக் குழுவிற்குத் தலைமை தாங்கிச் செல்கிறார்.
திரு கோயல், லண்டனில் நடைபெற்ற ‘இந்தியா–இங்கிலாந்து: முன்னேற்றத்தில் பங்காளிகள்’ வர்த்தகக் கருத்தரங்கில் கலந்துகொண்டு தனது ஐக்கிய ராஜ்ஜியப் பயணத்தை நிறைவு செய்தார். இந்த சந்திப்பு, இருதரப்பு பொருளாதார உறவுகளில் நிலவும் வலுவான உத்வேகத்தை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான ஒரு மாற்றியமைக்கும் கட்டமைப்பாக முன்மொழியப்பட்ட விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்திற்கு (CETA) இரு நாடுகளின் முன்னணி தொழில் பங்குதாரர்களும் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தினர்.
ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற சந்திப்புகளையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் கிரீஸ் பயணத்தையும் கருத்தில் கொண்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, உலகளாவிய பொருளாதாரக் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும், புத்தாக்கத்தால் வழிநடத்தப்படும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், முக்கிய சர்வதேச சந்தைகளில் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ராஜதந்திரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் காட்டிவரும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
கிரீஸ் பயணத்தின் போது, தூதுக்குழுவினர் ஏதென்ஸ் ஸ்டார்ட்அப் பிசினஸ் இன்குபேட்டரில் (THEA) நடைபெறும் விளக்கக்காட்சிகள் மற்றும் ஸ்டார்ட்அப் முன்மொழிவுகளில் பங்கேற்பார்கள். இது அடுத்த தலைமுறை நிறுவனங்களைக் காட்சிப்படுத்தவும், எல்லை தாண்டிய புத்தாக்கக் கூட்டாண்மைகளை ஊக்குவிக்கவும் ஒரு தளத்தை வழங்கும்.
இந்தக் குழு, ஏதென்ஸ் வர்த்தக மற்றும் தொழில் சபையில் (ACCI) இந்திய மற்றும் கிரேக்கத் தொழில் தலைவர்களுடன் சிறப்பு வட்டமேசை கலந்துரையாடல்களையும் நடத்தும். ஒத்துழைப்புக்கான புதிய வழிகளைக் கண்டறிவதையும், தனியார் துறை கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, உள்கட்டமைப்பு, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் பாதுகாப்பு, உணவு மற்றும் விவசாயம் உள்ளிட்ட முக்கியத் துறைகளை இந்தக் கலந்துரையாடல்கள் உள்ளடக்கும்.
முன்னுரிமைத் துறைகளில் மேம்படுத்தப்பட்ட முதலீடு மற்றும் வர்த்தகக் கூட்டாண்மைகளுக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக, இரு நாடுகளின் முன்னணிப் பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் ஒரு உயர்மட்ட வணிகக் கலந்துரையாடலை இந்த நிகழ்ச்சி உள்ளடக்கும். மேலும், மேம்பட்ட உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை ஆராய்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்துறை ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்காக, இந்தக் குழுவினர் முன்னணி கிரேக்க நிறுவனங்களுக்கும் பயணம் மேற்கொள்வார்கள்.
தொழில் கூட்டாண்மைகளை ஆழப்படுத்துவதையும் இருதரப்பு வர்த்தகத் தொடர்புகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட, முக்கிய வணிக மற்றும் நிறுவனப் பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்களுடன் இந்தப் பயணம் நிறைவடையும்.
திவாஹர்
