மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று (27.06.2026) குஜராத்தின் காந்திநகரில், குஜராத்திற்கான கூட்டுறவு அடிப்படையிலான போக்குவரத்துத் தளமான ‘பாரத் டாக்ஸி’யைத் தொடங்கி வைத்தார். டாக்சி, ஆட்டோ, இருசக்கர வாகனப் போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்களுக்கு இது உரிமை, மரியாதை, பாதுகாப்பு, செழிப்பு ஆகியவற்றை வழங்கும். அத்துடன் மக்களுக்கு நம்பகமான போக்குவரத்து வசதிகளை வழங்குவதையும் பாரத் டாக்ஸி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், துணை முதலமைச்சர் திரு ஹர்ஷ் சங்கவி, குஜராத் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு ஜிதுபாய் வகானி, குஜராத் தலைமைச் செயலாளர் திரு மனோஜ் தாஸ், பாரத் டாக்ஸியின் தலைவர் டாக்டர் ஜெயன் மேத்தா ஆகியோருடன் கூட்டுறவுத் துறையின் மூத்த அதிகாரிகள், ஏராளமான ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, இந்தியாவின் போக்குவரத்துத் துறைக்கு இன்று ஒரு மிக முக்கியமான நாள் என்று கூறினார். நாட்டின் வளர்ச்சியால் போக்குவரத்து சேவைகளின் தேவை ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். டாக்சி என்ற கருத்து இனி நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டும் உரியதல்ல எனவும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், பிற நகர்ப்புற போக்குவரத்து சேவைகளும் அதன் ஒரு பகுதியாகிவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதில் ஒரு ‘சாரதி’ எனப்படும் ஓட்டுநர் வெறும் சேவை வழங்குபவர் மட்டுமல்ல எனவும், அவர் இந்த கூட்டுறவு நிறுவனத்தின் மதிக்கப்படும் பங்குதாரர் என்றும் திரு அமித் ஷா தெரிவித்தார். ஓட்டுநர், வாடிக்கையாளர்கள் என இருவரின் நலன்களையும் காத்து சேவையின் தரத்தை மேம்படுத்துவது பாரத் டாக்ஸியின் முக்கிய நோக்கம் என்று அவர் கூறினார்.
கூட்டுறவு, நாட்டின் பல துறைகளில் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவந்து, மக்களுக்கு உரிமைகளையும் செழிப்பையும் வழங்கியுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். அமுல் நிறுவனத்தை. இதுவரை 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பாரத் டாக்ஸியில் இணைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அடுத்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளில் பாரத் டாக்ஸி 500-க்கும் மேற்பட்ட நகரங்கள், சிறு நகரங்களைச் சென்றடையும் என அவர் கூறினார். 2026 ஜூலை 31-ஆம் தேதிக்கு முன்னர், பாரத் டாக்ஸி ஏழு முக்கிய நகரங்களைச் சென்றடையும் என திரு அமித் ஷா தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது, பாரத் டாக்சியின் விரிவாக்கம் மற்றும் சீரான செயல்பாட்டிற்காக பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறப்பட்டன.
திவாஹர்
